சென்னை: கவிஞர் தமிழ் ஒளி பெயரில் அக்டோபர் மாதத்தில் தேசிய கருத்தரங்கம் நடத்தப்படும் என்று அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.
கவிஞர் தமிழ் ஒளியின் நூற்றாண்டு தொடக்க விழா மற்றும்படைப்புலகம் குறித்த 2 நாள் கருத்தரங்கம், சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று தொடங்கியது. சென்னை பல்கலை. தமிழ் இலக்கியத் துறை மற்றும் கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு விழாக்குழு நடத்தும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியில், ‘கவிஞர் தமிழ் ஒளி படைப்புலகம் – கருத்தரங்க ஆய்வுக் கட்டுரைகள்’ எனும் நூலை அமைச்சர் சாமிநாதன் வெளியிட்டு பேசியதாவது:
பாரதியார், பாரதிதாசன் வழியில் இலக்கிய பாரம்பரியத்தை தமது படைப்புகளில் கையாண்டவர் கவிஞர் தமிழ் ஒளி. காப்பியம், கவிதைகள், இதழியல், சிறுகதை, ஆய்வுகள், சிறார் இலக்கியம், நாடகம், திரைப்படம் என தான் வாழ்ந்த 40 ஆண்டுகளுக்குள் பல்வேறு தளங்களில் அவர் திறம்பட செயலாற்றியுள்ளார்.
அத்தகைய சிறப்புமிக்க கவிஞரின் நூற்றாண்டை கவுரவிக்கும் விதமாக அவரின் பெயரில் சென்னை தரமணியில் உள்ள உலக தமிழராய்ச்சி நிறுவனத்தில் அக்டோபர் மாதம் ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் விழாக்குழு தலைவர் சிகரம் ச.செந்தில்நாதன் பேசும்போது, ‘கவிதை, சிறார் இலக்கியம், நாடகம் என தமிழ் ஒளி பன்முகத்தன்மை கொண்டவர். அவரின் சிறப்பை அனைவரிடமும் கொண்டு செல்லும் விதமாக கடந்த 10 ஆண்டுகளாக திட்டமிட்டு பணியாற்றி வருகிறோம்’’ என்றார்.
பேராசிரியர் வீ.அரசு பேசும்போது, ‘‘கவிஞர் தமிழ்ஒளியை வெறுமனே இலக்கியத்துக்குள் மட்டும் வைத்து சுருக்கிவிட முடியாது. தனது எழுத்துகளின் மூலம் தமிழ்ச் சமூகம், மார்க்சியகொள்கைக்கு பெரும் பங்காற்றியுள்ளார். அதேநேரம் தமிழ் மீதான பற்றால் இந்தி திணிப்பையும் எதிர்த்தார். அவரின் சமூகப்பணி போற்றுதலுக்குரியது’’ என்று தெரிவித்தார்.
பேராசிரியர் பர்வீன் சுல்தானா பேசும்போது, ‘‘கவிஞர் தமிழ் ஒளியை இன்னும் நாம் கொண்டாடி மகிழ்ந்திருக்க வேண்டும். அவரின்படைப்புகளை பள்ளி, கல்லூரிகளில் பாடங்களாகக் கொண்டுவர தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும்’’ என்றார்.
இந்த நிகழ்வில், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவர் இ.சுந்தரமூர்த்தி, பேராசிரியர் கோ.பழனி உள்ளிட்டோர் பேசினர்.