சென்னை: சுவிட்சர்லாந்து நாட்டில் வாழும் ஈழத்தமிழர், சாந்தரூபி அம்பாளடியாள், ‘என்னுயிர்க் கீதங்கள் 50’ என்ற இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளார். அவரே எழுதி, இசை அமைத்து, பாடியுள்ள இந்த ஆல்பத்தை கே.பாக்யராஜ் சென்னையில் வெளியிட்டார். விழாவில் இயக்குநர்கள் பேரரசு, ராசி அழகப்பன், செந்தில்நாதன், இசையமைப்பாளர் சவுந்தர்யன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் பேசியதாவது: எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து தமிழுக்காக இவ்வளவு பெரிய விஷயங்களை செய்து வரும் அம்பாளடியாளைப் பார்க்கும் போது பொறாமையாக இருக்கிறது. இங்கு பேசியவர்கள் தமிழ் மொழி குறித்த தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள். அப்படி எல்லாம் கவலைப்படத் தேவையில்லை, தமிழ் என்றுமே அழியாது. அம்பாளடியாளைப் பார்க்கும் போது எனக்கு குயிலி என்பவர் தான் நினைவுக்கு வருகிறார். வேலுநாச்சியார் படையில் இருந்தவர் அவர். வெள்ளைக்காரர்களின் ஆயுத கிடங்கை மனித வெடிகுண்டாக மாறி அழித்தவர். எந்த அளவுக்கு வீரம் இருந்தால் அவர் அப்படி ஒரு செயலை செய்திருப்பார், அதேபோல் தான் அம்பாளடியாளின் வரிகளிலும் வீரம், காதல் என அனைத்தும் இருக்கிறது. அம்பாளடியாள் போன்றவர்கள் திரைத்துறைக்கும் வர வேண்டும். இவ்வாறு கே.பாக்யராஜ் கூறினார்.