Tuesday , November 28 2023
1126250

தமிழக சோதனை சாவடிகள் வழியாக கேரளாவுக்கு 10 சக்கரங்களுக்கு மேற்பட்ட லாரிகளில் கனிமம் கொண்டு செல்ல தடையில்லை | no restriction transport in trucks of more than 10 wheels to Kerala tn

மதுரை: தமிழக சோதனைச்சாவடிகள் வழியாக கேரளாவுக்கு 10 சக்கரங்களுக்கு மேற்பட்ட லாரிகளில் கனிமம் கொண்டு செல்லத் தடை விதிக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த `இந்தியன் டிரைவர்ஸ் சொசைட்டி’ பொதுச் செயலாளர் நாகராஜ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

கேரளா மற்றும் தமிழகம் முழுமைக்கும் வாகனங்களை இயக்குகிறோம். கேரளாவின் பெரும்பகுதி மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளதால், பெரும்பாலான பகுதி சுற்றுச்சூழல் உணர்திறன் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், குவாரி பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் நடக்கும் கட்டுமானப் பணிகள், சாலைப் பணிகள் மற்றும் இதர உள்கட்டமைப்புப் பணிகளுக்குத் தேவையான கிராவல் ஜல்லி கற்கள். எம்.சாண்ட், குவாரி தூசி மற்றும் மணலுக்கு தமிழகத்தையே சார்ந்துள்ளோம்.

தமிழகத்தின் உதவி இல்லாமல் கேரளாவின் உள்கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள முடியாது. தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு உரிய அனுமதியுடன் கனிமங்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

இந்நிலையில் தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச் சாவடி மோட்டார் வாகன ஆய்வாளர், புளியரை காவல் ஆய்வாளர் மற்றும் கனிமவள அதிகாரிகள் 10 சக்கரங்களுக்கு மேல் உள்ள லாரிகளில் கனிமங்களைக் கொண்டு செல்லத் தடை விதித்துள்ளனர்.

இதேபோன்று கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை, தேனி மாவட்டம் கம்பம் மெட்டு, கோவை மாவட்டம் வாளையார் சோதனைசாவடிகளிலும் இந்த வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

எனவே, 10 சக்கரங்களுக்கு மேற்பட்ட வாகனங்களில் கனிமங்கள் கொண்டுச் செல்ல தடை விதிக்ககூடாது என உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். மனுதாரரின் வழக்கறிஞர் புகழ்காந்தி வாதிடுகையில், மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சக அரசாணைப்படி 35 டன் மற்றும் 55 டன் வரை லாரிகளில் கனிமங்கள் கொண்டுசெல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உரிய அனுமதியுடன் சட்டப்பூர்வமாக கனிமங்கள் கொண்டு செல்வதைத் தடுக்க முடியாது. இதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது என்றார்.

கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு அதிகளவில் கனிமங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு, சாலை பாதிப்பு ஏற்படுகிறது. தமிழ்நாடு மோட்டார் வாகனசட்டப்படி வாகனத்தின் வேகம் மற்றும் எடை அளவைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் போக்குவரத்து அதிகாரிகளுக்கு உண்டு என்றார்.

உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு: இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: தமிழகத்துக்கு கடந்த 2021-22-ல் பெரும் கனிமங்கள் மூலம் ரூ.817.52 கோடியும், 2022-23-ல் ரூ 1049.22 கோடியும் சிறு கனிமங்கள் மூலம் 2021-22-ல் 365.89 கோடியும். 2022-23-ல் 598.29 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது. ஆனால், 2022-23-ல் மட்டும் கர்நாடகாவில் ரூ.5,945.77 கோடியும், ஆந்திராவில் ரூ.4,756 கோடியும். கேரளாவில் ரூ.317 கோடியும் வருமானம் கிடைத்துள்ளது. சிறு கனிமங்கள் மூலம் மிகக் குறைந்த அளவே வருவாய் கிடைத்துள்ளது.

உரிமம் வரித் தொகை கட்டணம் 2 தலைமுறைகளாக உயர்த்தப்படவில்லை. தற்போதுதான் இந்தக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, கனிமவளத் துறை ஆணையர் தரப்பில் உரிய விளக்கமளிக்க வேண்டும். 10 சக்கரங்களுக்கு மேற்பட்ட லாரிகளில் கனிமங்கள் கொண்டு செல்லக் கூடாது என்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. அடுத்த விசாரணை நவ. 25-க்கு தள்ளிவைக்கப்படுகிறது, என உத்தரவிட்டார்.

Thanks

Check Also

1160110

திமுக கூட்டணி கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வரும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தகவல் | dmk alliance parties will come to admk alliance

சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வரும்என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *