Sunday , December 3 2023
1126258

தமிழக எம்.பி.க்கள் எண்ணிக்கை குறையக் கூடாது: மத்திய அரசு உத்தரவாதம் தர முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல் | Tamil Nadu MP numbers should not decrease: CM Stalin insistence that the central government should guarantee

சென்னை: மகளிர் இடஒதுக்கீட்டை திமுக வரவேற்கும் நிலையில், தொகுதி மறுவரையறையில் தமிழக எம்.பி.க்கள் எண்ணிக்கை குறைக்கப்படாது என்ற உத்தரவாதத்தை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்றுமுதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள், குடியுரிமை திருத்தச் சட்டம்,காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பறிப்பு சட்டம் மற்றும் முற்பட்ட சாதியினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு சட்டம் போன்றவற்றை கடும் எதிர்ப்புக்கு இடையே பிடிவாதமாக நிறைவேற்றிய பாஜக அரசு, அவற்றுக்கு காட்டிய அவசரத்தை மகளிர் மசோதாவுக்கு கடந்த 9 ஆண்டுகளாக காட்டவில்லை.

இப்போது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தோல்வி பயம் வாட்டி வருவதால் மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீட்டை வழங்கி சாதனை செய்துவிட்டதாக காட்டிக் கொள்கின்றனர்.

பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீதம் இடஒதுக்கீட்டை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி 1996-ல் வழங்கினார். அதுதான் இன்று 50 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கடந்த 1996-ம் ஆண்டு திமுக அங்கம் வகித்த மத்திய அரசில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின், 2005-ம் ஆண்டும் திமுக இடம்பெற்ற மத்திய அரசு இதனைத் தாக்கல் செய்தது. முதலில் ஆதரிப்பதாகச் சொன்ன பாஜக பின்னர் எதிர்த்தது. பாஜக பெண் உறுப்பினர் உமாபாரதியே இதைக் கடுமையாக எதிர்த்தார். எதிர்த்தவர்களில் தற்போதைய உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் முக்கியமானவர்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் கடந்த 2010-ம் ஆண்டு மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதி மாநிலங்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு மறுநாள் நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் சில கட்சிகளின் எதிர்ப்பின் காரணமாக நிறைவேற்றப்படவில்லை. அதன்பின் ஆட்சிக்கு வந்த பாஜக அரசு அந்த மசோதாவைக் கிடப்பில் போட்டுவிட்டது.

2014, 2019-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் பெரும்பான்மையைப் பெற்றது பாஜக அரசு. அவர்கள் நினைத்திருந்தால் உடனடியாக நிறைவேற்றியிருக்கலாம். ஆனால் செய்யவில்லை.

கடந்த 2017-ம் ஆண்டு திமுக சார்பில், மாநிலங்களவை உறுப்பினராக இருந்த கனிமொழி தலைமையில் டெல்லியில் 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வலியுறுத்தி பேரணி நடத்தப்பட்டது. மகளிர் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என கடந்த சனிக்கிழமை திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் 9 ஆண்டுகளாக பாஜக அரசு இதை கண்டுகொள்ளவில்லை.

காலம் கடந்து கண்துடைப்புக்காகச் செய்தாலும், மத்திய அரசு கொண்டுவரும் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு மசோதாவை திமுக சார்பில் வரவேற்கிறேன். பிற்படுத்தப்பட்ட – மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயப் பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற கோரிக்கையை புறந்தள்ளாமல், அதன் நியாயத்தை மத்திய ஆட்சியாளர்கள் பரிசீலிக்க வேண்டும்.

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என்று பாஜக எந்த உத்தரவாதத்தையும் தரவில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலான தொகுதி மறுவரையறை, அதன்பேரில் 2029 தேர்தலில் நடைமுறைக்கு வரும் மகளிர் ஒதுக்கீட்டுக்கு இப்போது சட்டம் இயற்றும்விசித்திரம் பாஜகவால் அரங்கேற்றப்படுகிறது.

தலைக்குமேல் தொங்கும் கத்தி: தமிழகத்தின் மீது குறிப்பாக தென்னிந்தியா மீது தலைக்கு மேல்தொங்கும் கத்தியாக தொகுதி மறுவரையறை உள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை உயர்த்தி, தென்னிந்தியாவின் அரசியல் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் அரசியல் சூழ்ச்சி முறியடிக்கப்பட வேண்டும். அரசியல் விழிப்புமிக்க தமிழகத்தை வஞ்சிக்கும் அநீதி முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்.

மகளிர் மசோதாவை வரவேற்கும் வேளையில், மறுவரையறை என்ற பெயரில் தென்னிந்திய மக்களுக்கு எந்தத் தீங்கையும் செய்துவிட மாட்டோம் என்ற உத்தரவாதத்தை வழங்கி, மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்றுபிரதமரை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Thanks

Check Also

1162680

மிக்ஜாம் புயல் | சென்னை மெட்ரோ ரயில் சேவையின் திங்கள்கிழமை அட்டவணையில் மாற்றம் | Trains running tomorrow as per Saturday schedule: Metro Rail Notification

Last Updated : 03 Dec, 2023 07:04 PM Published : 03 Dec 2023 07:04 PM …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *