சென்னை: தமிழகம் முழுவதும் இரண்டே நாட்களில் 60 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக காவல் துறை தலைமை டிஜிபியாக இருந்த சைலேந்திர பாபு கடந்த ஜூன் 30-ம் தேதி ஓய்வு பெற்றார். சென்னை காவல்ஆணையராக இருந்த சங்கர் ஜிவால், புதிய டிஜிபியாக பொறுப்பேற்றார். சென்னை காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் பதவி ஏற்றுக்கொண்டார். முன்னதாக, சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்த சங்கர், ஆவடி காவல் ஆணையராக மாற்றப்பட்டு, அங்கிருந்த அருண், சட்டம் – ஒழுங்குகூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டார்.
இதுபோல, தமிழகம் முழுவதும் காவல் துறையில் உடனடியாக அதிகாரிகளின் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒரு மாத இடைவெளிக்கு பிறகு,தற்போது அடுத்தடுத்து 2 நாட்களில் 60 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு, அந்த இடத்தில் புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, கடந்த 4-ம் தேதி இரவு நெல்லை, மதுரை, திருச்சி காவல் ஆணையர்கள் உட்பட 27 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
கடந்த 5-ம் தேதி காத்திருப்போர் பட்டியலில் இருந்த என்.நாதா, சட்டம் – ஒழுங்கு உதவி ஐ.ஜி.யாகவும், அங்கிருந்த இ.எஸ்.உமா, தலைமையிட உதவி ஐ.ஜி.யாகவும் மாற்றப்பட்டனர். சென்னை மத்திய மண்டல பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு எஸ்.பி. அங்கித் ஜெயின், தி.நகர் துணை ஆணையராகவும், அங்கிருந்த ஏ.கே.அருண் கபிலன், சேலம் எஸ்.பி.யாகவும் பணியமர்த்தப்பட்டனர். சேலம் எஸ்.பி.யாக இருந்த ஆர்.சிவகுமார், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி.யாகவும், அங்கிருந்த எஸ்.சக்தி கணேசன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கு கண்காணிப்பு பிரிவு உதவி ஐ.ஜி.யாகவும் நியமிக்கப்பட்டனர்.
உள்துறை செயலாளர்: சென்னை வண்ணாரப்பேட்டை துணை ஆணையராக இருந்த அல்லாடிபள்ளி பவன்குமார் ரெட்டி, தாம்பரம் சட்டம் – ஒழுங்கு துணை ஆணையராகவும், அங்கிருந்த கே.அதிவீரபாண்டியன், கடலோர பாதுகாப்பு குழுமத்தின் நாகப்பட்டினம் பிரிவு எஸ்.பி.யாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
பள்ளிக்கரணை சட்டம் – ஒழுங்கு துணை ஆணையர் கே.ஜோஸ் தங்கையா, சென்னை பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு வடக்கு மண்டல எஸ்.பி.யாகவும், அடையாறு துணை ஆணையர் மகேந்திரன், சென்னை சரக லஞ்ச ஒழிப்பு பிரிவு எஸ்.பி.யாகவும் மாற்றப்பட்டுள்ளனர். இவ்வாறு 33 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் இரண்டேநாட்களில் 60 போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உள்துறை செயலர் அமுதா உத்தரவிட்டிருப்பது காவல் துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.