சென்னை: தமிழகத்தில் டெங்கு பாதிப்பு உள்ள 283 இடங்களில் நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்தார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துவருகிறது. இதனால், கொசுக்கள் மற்றும் பருவகால மாற்றத்தால் பரவும் நோய்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, டெங்கு, இன்ஃப்ளூயன்சா காய்ச்சலால் நூற்றுக் கணக்கானோர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய் பரவலை தடுக்க சுகாதாரத் துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, அனைத்து சுகாதார மாவட்டங்களிலும் 8,733 பகுதிகளில் கொசுக் கள், லார்வாக்கள் சேகரிக்கப் பட்டு பொது சுகாதாரத் துறை யின் ஆய்வகத்துக்கு பரிசோத னைக்காக அனுப்பப்பட்டன. அதில், 283 இடங்களில் இருந்த கொசுக்கள் டெங்கு காய்ச்சலை பரப்பக்கூடியவை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் கூறியதாவது:
கொசுக்களில் எந்த வகை வைரஸ் பாதிப்பு உள்ளது என்பதை கண்டறிய ஆய்வு நடத்தப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு சுகாதார மாவட்டத்தில் இருந்தும் 15 நாட்களுக்கு ஒருமுறை குறைந்தது 7 மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
அவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அதில் டெங்கு பாதிப்புக்கான வைரஸ் இருந்தால், அதை தனியே பிரிக் கப்பட்டு, டெங்கு காய்ச்சலில் உள்ள 4 வகைகளில் எந்த வகை என்பது கண்டறியப்படும்.
இதன்மூலம் அந்த கொசுக்கள் மூலமாக மனிதர்களுக்கு பரவலாக பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பாகவே சம்பந்தப்பட்ட பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க முடியும்.
579 பகுதிகளில் டெங்கு கொசு: அந்த வகையில், டெங்கு பாதிப்பு உள்ள 283 இடங்களில் நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் 14,212 இடங்களில் இருந்து கொசுக்களின் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதித்ததில் 579 பகுதிகளில் டெங்குகொசுக்கள் இருந்தது கண்டறியப்பட்டது என்றார்.