தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சியில் டெங்கு தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள களப் பணியாளர்கள், 300 வீடுகளுக்கு ஒரு குழு வீதம் பிரித்துக்கொண்டு செயல்படுகின்றனர். தஞ்சாவூர் மாநகராட்சியில் 51 வார்டுகளில் 54,234 வீடுகள் உள்ளன. தற்போது மழைக்காலமாக இருப் பதால் டெங்கு பரவல் அதிகரித்து வரும் நிலையில், தஞ்சாவூர் மாநகராட்சியில் கடந்த ஆண்டு தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட டெங்கு தடுப்பு களப் பணியாளர்களுக்கு தொடர்ந்து பணி வழங்கப்பட்டு, டெங்கு தடுப்புப் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து தஞ்சாவூர் மாநகராட்சியின் நகர்நல அலுவலர் சுபாஷ்காந்தி கூறியது: மாநகராட்சியில் உள்ள 14 கோட்டங்களில் 210 களப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில், 300 வீடுகளுக்கு ஒரு டெங்கு தடுப்பு களப் பணியாளர் குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழுவினர் தொடர்ந்து 300 வீடுகளையும் வாரந்தோறும் கண்காணித்து வருகின்றனர். இவர்கள் வீடுதோறும் சென்று, டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், வீடு மற்றும் சுற்றுப்புறங்களை ஆய்வு செய்து, அங்கு தேவையின்றி காணப்படும் பிளாஸ்டிக் கப்கள், தேங்காய் சிரட்டைகள், டயர்கள், உடைந்த பாத்திரங்கள் போன்றவற்றை அகற்றி, பொதுமக்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றனர்.
மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் வீட்டில் உள்ள சிறிய தொட்டிகளில் பிளீச்சிங் பவுடர் தெளித்து சுத்தம் செய்தல் மற்றும் கொசுப்புழு உற்பத்தியாகாதவாறு தொட்டியை மூடிவைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடியிருப்பு பகுதிக்கு அருகிலுள்ள காலியிடங்களில் மழைநீர் தேங்காதவாறு அகற்றப்பட்டு வருகிறது. இதற்காக, தினந்தோறும் கூட்டு துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தினமும் 12 காய்ச்சல் கண்டறியும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மக்கள் அதிகம் கூடும் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், அக்.14-ம் தேதி தொடங்கிய ‘வீடுதோறும் டெங்கு விழிப்புணர்வு கடிதம்’ வழங்கும் பணி நவ.11-ம் தேதியுடன் மாநகரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்பட்டு, வீட்டு உரிமையாளர்களிடம் ஒப்புதல் கையெழுத்தும் பெறப்பட்டுள்ளது. இந்த முயற்சிக்கு பொதுமக்களிடம் நல்ல ஒத்துழைப்பும், வரவேற்பும் இருந்ததால் பொதுமக்களிடம் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, தஞ்சாவூர் மாநகர பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவல் மிக மிக குறைவாகவே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.