பாலிவுட் நடிகர் நானா படேகர் தன்னிடம் செல்ஃபி எடுக்க வந்த நபரை தாக்கியதாக வீடியோ வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர். ஆனால், அது படப்பிடிப்புக்கான காட்சி என இயக்குநர் அனில் ஷர்மா விளக்கமளித்துள்ளார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகரான நானா படேகர், பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘காலா’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே கவனம் பெற்றார். 3 தேசிய விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ள அவரது நடிப்பில் கடைசியாக ‘தி வேக்கின் வார்’ திரைப்படம் வெளியானது. இந்நிலையில், நடிகர் நானா படேகர் தன்னிடம் செல்ஃபி எடுக்க வந்தவரை தலையில் அடித்து விரட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர். ‘திமிரு’ பிடித்தவர் என்றெல்லாம் நெட்டிசன்கள் வசைபாடி வரும் நிலையில், இதன் உண்மை தன்மை குறித்து பேசியுள்ளார் இயக்குநர் அனில் ஷர்மா.
உண்மை என்ன? – இது தொடர்பாக இந்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர், “நான் இப்போது தான் இந்த செய்தியைப் பார்த்தேன். அந்த காணொலியை சற்று முன் பார்த்துக் கொண்டிருந்தேன். நானா படேகர் யாரையும் அடிக்கவில்லை. மாறாக அது என்னுடைய படத்தில் வரும் ஒரு காட்சி. உத்தரப் பிரதேசம் வாரணாசியில் உள்ள பனராஸின் மக்கள் கூட்டம் நிறைந்த சாலையில் நாங்கள் அதை படமாக்கிக் கொண்டிருந்தோம். ஸ்கிரிப்டின்படி, நானா படேகர் அந்த பையனை அடிக்க வேண்டும். அப்படி ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும்போது யாரோ இதனை செல்ஃபோனில் வீடியோ எடுத்து பரப்பியுள்ளனர்.
இது சமூக ஊடகங்களில் நானா படேகர் மீது எதிர்மறையான பிம்பத்தை உருவாக்கி வருகிறது. அவர் முரட்டுத்தனமான நபராக சித்தரிக்கப்படுகிறார். இது முற்றிலும் தவறானது. இந்த வீடியோவின் உண்மையை ரசிகர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். சன்னி டியோல் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான ‘கதார் 2’ படத்தின் இயக்குநர் தான் அனில் ஷர்மா. அவர் தற்போது நானா படேகரை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருவது குறிப்பிட்டத்தக்கது.