திருப்பூர்: மின் வாரியத்தால் உயர்த்தப்பட்ட நிலைக் கட்டணம் மற்றும் பரபரப்புநேரக் கட்டணத்தை திரும்பப்பெற வலியுறுத்தி திருப்பூரில் வரும் 25-ம் தேதி நடைபெறும் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்துக்கு 30-க்கும் மேற்பட்ட தொழில்அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் எம்.பி.முத்துரத்தினம், கோபி பழனியப்பன் ஆகியோர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
தமிழ்நாடு மின்வாரியம் உயர்த்தியுள்ள 430 சதவீத நிலைக் கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும். பரபரப்பு நேரக் கட்டணம், சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.
அதேபோல, இரண்டு ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்துவதை தவிர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் ஏற்கெனவே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினோம். மேலும், தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும்வகையில் கடிதம் மற்றும் இ-மெயில் அனுப்பும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
எனினும், எங்களது கோரிக்கைகளை ஏற்காத நிலையில் வரும் 25-ம் தேதி உற்பத்தி நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்துக்கு, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
அதேபோல, ஹோட்டல் சங்கம், வியாபாரிகள் சங்கத்தினரும் போராட்டத்துக்கு ஆதரவளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம். மூலப் பொருட்கள் விலையேற்றம் காரணமாக தொழில் நலிவடைந்து வந்த நிலையில், மின் வாரியத்தின் நிலைக் கட்டண உயர்வு மற்றும்பரபரப்பு நேரக் கட்டணத்தால் திருப்பூர் தொழில் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இதை கவனத்தில் கொள்ளவில்லை என்றால், தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுப்போம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.