Tuesday , November 28 2023
1125794

சென்னை பல்கலை. துணை வேந்தர் தேடுதல் குழுவில் இருந்து யுஜிசி பிரதிநிதியை நீக்கியது தமிழக அரசு | UGC representative removed from Madras University VC search panel: TN Govt

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரை தேர்வு செய்வதற்காக ஆளுநர் அமைத்திருந்த 4 பேர் அடங்கிய குழுவிலிருந்து, யுஜிசி பிரதிநிதி ரத்தோரை நீக்கிவிட்டு, 3 பேர் அடங்கிய குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழகம், கல்வியியல் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக்கழகங்களில் தற்போது துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பல்கலைக்கழகங்களின் துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவில், பல்கலைக்கழக செனட் உறுப்பினர்கள், தமிழக அரசின் பிரதிநிதி ஒருவர் மற்றும் ஆளுநர் தரப்பில் ஒருவர் இடம்பெறுவர். இக்குழு விண்ணப்பங்களை பரிசீலித்து, தகுதியான 3 பேரின் பெயர்களை ஆளுநருக்கு பரிந்துரைக்கும். அதில் ஒருவரை ஆளுநர் நியமிப்பது வழக்கம்.

இந்நிலையில், கடந்த 6ம் தேதி, தமிழகத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழகம், கல்வியியல் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக்கழகங்களுக்கும் துணை வேந்தர்களை தேர்வு செய்வதற்கு 4 பேர் அடங்கிய தனித்தனிக் குழுக்களை அமைத்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டிருந்தார். அந்தக் குழுக்களில், முதன்முறையாக யுஜிசி பிரதிநிதிகள் இடம்பெற்றிருந்தனர்.

குறிப்பாக, சென்னைப் பல்கலைக்கழகத்துக்கான தேடுதல் குழுவில், தமிழக ஆளுநரின் பிரதிநியாக, கர்நாடக மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் பட்டு சத்யநாராயணாவும், தமிழக அரசின் பிரதிநிதியாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், மாநில திட்டக் குழுவின் உறுப்பினருமான கே.தீனபந்துவும், பல்கலைக்கழக செனட் பிரதிநிதியாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பி.ஜெகதீசனும், யுஜிசி பிரதிநிதியாக, தெற்கு பிஹார் மத்தியப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ஹெச்சிஎஸ் ரத்தோரும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரை தேர்வு செய்வதற்கான குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்தக் குழுவில், தமிழக ஆளுநரின் பிரதிநியாக, கர்நாடக மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் பட்டு சத்யநாராயணா, தமிழக அரசின் பிரதிநிதியாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், மாநில திட்டக் குழுவின் உறுப்பினருமான கே.தீனபந்து, பல்கலைக்கழக செனட் பிரதிநிதியாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பி.ஜெகதீசன் ஆகிய 3 பேர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். யுஜிசி பிரதிநிதியாக, தெற்கு பிஹார் மத்தியப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ஹெச்சிஎஸ் ரத்தோர் தமிழக அரசு அமைத்துள்ள தேடுதல் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரை தேர்வு செய்வதற்காக தமிழக ஆளுநர் ஒரு குழுவையும், தமிழக அரசு சார்பில் ஒரு குழுவையும் அமைத்து உத்தரவிட்டிருப்பது கல்வித் துறை வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Thanks

Check Also

1160112

மத்திய அரசை கண்டித்து விவசாய அமைப்புகள், தொழிற்சங்கங்கள் 2-வது நாளாக முற்றுகை போராட்டம் | protest for the 2nd day to condemn the central government

சென்னை: மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி இணைந்து 2-வது நாளாக சென்னையில் நேற்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *