சென்னை: சென்னையில் சாலை மற்றும் மழைநீர் வடிகால் பணிகளை வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குள் முடிக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வதற்காக தூய்மை இந்தியா திட்ட சேமிப்பு நிதியில் ரூ.30 கோடியே 28 லட்சத்தில் 74 காம்பாக்டர் வாகனங்கள், நிர்பயா திட்டநிதியில் ரூ.4 கோடியே 37 லட்சத்தில் 15 நடமாடும் மகளிர் ஒப்பனை அறை வாகனங்கள் ஆகியவை வாங்கப்பட்டுள்ளன. இவற்றின் சேவைகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து, சென்னை மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் சாலைப் பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் நேரு தலைமையில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை மாநகரப் பகுதியில் மாநகராட்சி, குடிநீர் வாரியம், நெடுஞ்சாலைத் துறை, மின்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். கூட்டத்தின் முடிவில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முதல்வர் தலைமையில் நேற்று, சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால், வடிகால் இணைப்பு, சாலைப் பணிகள், குடிநீர் வழங்கல் துறை சார்பாக குழாய் பதிக்கும் பணிகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. முதல்வரின் அறிவுறுத்தல்படி இன்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சாலைகளை ஒரு வாரத்தில் சரி செய்ய வேண்டும்.
குடிநீர் வாரிய பணிகளை மேற்கொள்ள எந்த பள்ளமும் புதிதாகத் தோண்ட வேண்டாம். மழைக்காலம் வர இருப்பதால் ஒரு மாதத்துக்கு எந்த புதியபணிகளும் மேற்கொள்ள வேண்டாம். நடைபெற்று வரும் பணிகளை விரைவாக முடித்துக் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம். சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வடிகால்களை ஒன்றோடு ஒன்று இணைக்கும் பணிகள் வரும் 30-ம் தேதி நிறைவடையும். இணைக்கும் பணிகள் முடிவு பெறாமல் இருக்கும் சில இடங்களில் தக்க பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைத்து பணிகளையும் பருவமழை தொடங்குவதற்குள் முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகத் துறைச் செயலர் தா.கார்த்திகேயன், தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தலைவர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.