Thursday , November 30 2023
1156358

‘செந்தில் பாலாஜிக்கு ஆபத்து…’ என வாதம் – மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு | Supreme Court orders to submit of medical reports of minister Senthil Balaji

புதுடெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரது மருத்துவ அறிக்கைகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை வரும் இம்மாதம் 28-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன. இதையடுத்து, அவருக்கு ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பீலா எம்.திரிவேதி, சதீஷ் சந்திர ஷர்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி, செந்தில் பாலாஜிக்கு இதய பிரச்சினை உள்ளது. அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அவருக்கு தற்போது இடைக்கால ஜாமீனாவது வழங்க வேண்டும்.

மேலும், அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. எனவேதான் இந்த மனு மருத்துவ காரணங்களுக்காகத்தான் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது அவருக்கு இருக்கும் இதயக் குழாய் அடைப்புக்கு உரிய சிகிச்சை வழங்கவில்லை என்றால், அது அவருக்கு ஆபத்தாக முடியும். குறிப்பாக, உரிய சிகிச்சை வழங்கவில்லை என்றால் அவர் ‘பக்கவாதம் நோய்க்கு’ தள்ளப்படுவார்” என்று வாதிட்டார்.

அப்போது அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “மருத்துவ அறிக்கையில், செந்தில் பாலாஜிக்கு மருத்துவமனையில் அனுமதித்து தான் சிகிச்சை வழங்க வேண்டும் என்று எங்கும் கூறவில்லை” என்றார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், அமைச்சர் செந்தில் பாலாஜியின் எம்ஆர்ஐ ஸ்கேன் அறிக்கை உள்ளிட்ட மருத்துவ அறிக்கைகள் மற்றும் சிகிச்சை தொடர்பான விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை வரும் நவம்பர் 28-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Thanks

Check Also

1161021

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக மதுரை குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்த முடிவு | Decision to Speed Up Implementation of Madurai Drinking Water Project before Lok Sabha Elections

கூடலூர்: தேனியில் நடைபெற்று வரும் மதுரை குடிநீர் திட்டப் பணிகளை வரும் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக முடிக்க திட்டமிடப் பட்டுள்ளது. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *