Saturday , December 9 2023
1125759

சீமான் மீதான வழக்கை 11 ஆண்டுகளாக நிலுவையில் வைத்தது ஏன்? – காவல் துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு | Why was the case against Seeman pending for 11 years? HC orders police to respond

சென்னை: ‘நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரை 2012-ஆம் ஆண்டே வாபஸ் பெற்ற நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான வழக்கை நிலுவையில் வைத்திருந்தது ஏன்?’ என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், இது குறித்து காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “கடந்த 2011-ம் ஆண்டு அளித்த புகாரை திரும்பப் பெற்றுக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கடிதம் கொடுத்தார். அதன் அடிப்படையிலும், அப்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையிலும், போலீஸார் வழக்கை முடித்து வைத்தனர். இந்த நிலையில், தற்போது அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, காவல் துறை எனக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

திமுக அரசுக்கு எதிராகவும், திராவிட கொள்கைக்கு எதிராகவும் கருத்துகள் கூறி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2011-ல் முடிக்கப்பட்ட வழக்கை, 12 ஆண்டுகளுக்குப் பின், அரசியல் உள்நோக்கத்துடன் மீண்டும் விசாரிக்கப்படுகிறது. எனவே, இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்” எனவும் மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சீமான் தரப்பில், 2011-ல் அளித்த புகாரை 2012-ல் விஜயலட்சுமி வாபஸ் பெற்ற நிலையில், 2023-ல் புதிதாக புகார் அளித்து, அந்தப் புகாரும் ஒரு மாதத்தில் வாபஸ் பெறப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது. அப்போது காவல் துறை தரப்பில், இந்த மனுவின் நகல் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மனுவின் நகலை காவல் துறை தரப்புக்கு வழங்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும், 2011 மற்றும் 2023-ல் விஜயலட்சுமி அளித்த புகார்கள் மற்றும் வாபஸ் பெறப்பட்ட விவரங்களை தாக்கல் செய்யவும் காவல் துறைக்கு உத்தரவிட்டார். 2011-ல் அளித்த புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்ற நிலையில் அந்த வழக்கை நிலுவையில் வைத்திருந்தது ஏன் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, அதுகுறித்து காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு செப்டம்பர் 26-ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

Thanks

Check Also

1164932

புதுச்சேரியில் ரூ.393 கோடியில் ப்ரீபெய்டு ஸ்மார்ட் மீட்டர் பொருத்த அரசு அனுமதி – நடைமுறை என்ன? | Govt approves Rs 393 crore prepaid smart meter installation in Puducherry

புதுச்சேரி: புதுச்சேரியில் ரூ.393 கோடியில் ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த அரசு அனுமதி தந்துள்ளது. மின் மீட்டருக்கான பணத்தை 90 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *