சென்னை: கைதியும், அவரது அடிப்படை உரிமைகளும் சிறைக் கதவுகளால் பிரிந்து விடுவதில்லை என கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், ஆயுள் தண்டனை கைதிக்கு 40 நாட்கள் விடுப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.
செல்வம் என்பவருக்கு கொலை வழக்கில் திருநெல்வேலி நீதிமன்றம், மரண தண்டனை விதித்தது. பின்னர், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. கடந்த 1994-ம் ஆண்டு முதல் தண்டனை அனுபவித்து வரும் அவர், தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குழந்தைகளின் படிப்புக்கு ஏற்பாடு செய்யவும், வீட்டை பழுது பார்க்கவும் 40 நாட்கள் விடுப்பு கோரி சிறைத் துறைக்கு விண்ணப்பித்தார். அதன் மீது எந்த முடிவும் எடுக்கப்படாததால், விடுப்பு வழங்க உத்தரவிடக் கோரி செல்வம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுந்தர் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “கடந்த 29 ஆண்டுகளில் 15 முறை விடுப்பில் வெளியே சென்றுள்ளார். அந்த சமயங்களில் எந்த அசம்பாவித சம்பவங்களிலும் ஈடுபடாமல், குறிப்பிட்ட நாட்களில் மீண்டும் சரணடைந்துள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டது.
அப்போது அரசுத் தரப்பில், “சிறை நன்னடத்தை அதிகாரி விடுப்பு வழங்கலாம். இதுகுறித்து அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. எனவே, மனுதாரரின் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும்” என விளக்கம் அளிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “ஏற்கெனவே காவல் துறை பாதுகாப்புடன் 15 முறை உயர் நீதிமன்றம் விடுப்பு வழங்கியுள்ளது. சிறைக் கதவுகளால், கைதியும், அவரது அடிப்படை உரிமைகளும் பிரிந்து விடுவதில்லை” எனக் கூறி, 40 நாட்கள் செல்வத்துக்கு காவல் துறை பாதுகாப்புடன் விடுப்பு வழங்கி உத்தரவிட்டனர். காவல் துறை பாதுகாப்புடன் வழங்கப்படும் விடுப்பு என்பது மனுதாரரை வீட்டுக் காவலில் வைத்திருப்பதாக கருதக் கூடாது எனவும் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.