சென்னை: சென்னையில் உள்ள சாலைகளில் இன்று முதல் மறுஉத்தரவு வரும் வரை வெட்டக் கூடாது என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவ மழையை முன்னிட்டு, குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றும் வாரியம், மின்சார வாரியம், நகர்ப்புற எரிவாயு பகிர்ந்தளிக்கும் நிறுவனங்கள், கண்ணாடி இழை வடங்கள் பதிக்கும் நிறுவனங்கள் மூலமாக, மண்டலம் 1 முதல் 15 வரையில் உள்ள பேருந்து சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகளில் வெட்டும் பணியை நேற்றுடன் நிறுத்தி வைக்க மாநகராட்சி கூடுதல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சாலை வெட்டும் பணியை செப். 21-ம் தேதி (இன்று) முதல் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நிறுத்தி வைக்க வேண்டும். மேலும் இக்காலங்களில் அவசர தேவைகளுக்கு மட்டும் சாலையில் வெட்டும் பணியை மேற்கொள்ள இணை ஆணையர் (பணிகள்), வட்டார துணை ஆணையர்கள் (வடக்கு, மத்தியம், தெற்கு) மூலமாக கூடுதல் ஆணையரிடம் ஒப்புதல் பெற்ற பின்னரே அனுமதி அளிக்கப்படும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.