தூத்துக்குடி: குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் சமூகப் பாதுகாப்பு துறையின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், ‘குழந்தைகளுக்கான நடை’ என்ற பெயரில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.
தூத்துக்குடி ராஜாஜி பூங்கா முன்பிருந்து பேரணியை தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமை வகித்தார். காமராஜ் கல்லூரி மாணவ, மாணவிகள், சைல்டு லைன் பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சமூக பாதுகாப்பு துறையும்,காவல் துறையும் இணைந்து குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்கவும், பாதிக்கப்பட்டோருக்கு உரிய இழப்பீடுகள் விரைவாக கிடைக்கவும் நடவ டிக்கை எடுத்து வருகிறோம்.
ஈரோடு மாவட்டத்தில் சத்துணவு முட்டைகள் அழுகியிருந்ததாக பாஜகவினர் புகார் கூறியுள்ளனர். சத்துணவில் வாரத்தில் 3 நாட்கள்முட்டை விநியோகம் செய்யப்படுகிறது. பழைய முட்டைகளை பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்காக, மூன்று நாட்களும் முட்டையில் தனித்தனி கலர் அடையாளம் வைக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள் ளது.
அதன்படி அன்றைய தினம் முட்டையில் கருப்பு கலர் இருந்தது. குறிப்பிட்ட நாளில் அங்கு பலத்தமழை பெய்ததால் முட்டைகள் நனைந்து, கருப்பு மை ஊறி முட்டைக்கு உள்ளே கருப்பு கலர் இறங்கியுள்ளது. இது உணவு பாதுகாப்பு துறை ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டு அறிக்கையும் வெளி யிடப்பட்டு விட்டது.
சிலர் அரசு மீது எப்போது குறைகண்டுபிடிக்கலாம்? என்ற நோக்கத்தில் இதை பூதாகரமாக்க முயன்ற னர். ஆனால், உண்மை நிலவரம் அதுவல்ல. மாணவர்களுக்கு நல்லதரமான முட்டைகள்தான் வழங்கப் படுகின்றன.
தமிழகத்தில் குழந்தை திருமணங்கள் அதிகளவில் தடுத்து நிறுத்தப்படுகின்றன. சில இடங்களில் பெற்றோரே குழந்தை திருமணங்களை நடத்தி வைக்கின்றனர். இதுதொடர்பாக 1098 என்ற தொலைபேசிஎண்ணுக்கு அழைப்பு வந்ததும் உடனடியாக தடுத்து நிறுத்திவிடுகி றோம். 18 வயதுக்கு குறைவான வர்கள் காதல் திருமணம் செய் தாலும் போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.