கோவை: ‘‘எனக்கு மூக்கு உடைத்தாலும் பரவாயில்லை, மருந்து போட்டு வந்து மீண்டும் கோவையில் நிற்பேன்’’ என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் கோவை மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் வெள்ளிக்கிழமை நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமை வகித்தார். அப்போது கட்சி நிர்வாகிகளிடையே அவர் பேசியதாவது: "சனாதனம் என்ற ஒரு வார்த்தை சொன்னதற்காக சிறுபிள்ளையை தாக்குகின்றனர். அது அவரது தாத்தாவுக்கு தாத்தா கூறிய தகவல் என்றார். எங்களுக்கு அந்த வார்த்தையை சொன்னவர் பெரியார். சாமி இல்லை என சொல்வது பெரியாரின் வேலை அல்ல, சமுதாயத்துக்காக கடைசி வரை வாழ்ந்தவர் பெரியார்.திமுக அல்லது வேறு எந்த கட்சியும் பெரியாரை சொந்தம் கொண்டாட முடியாது, பெரியாரை தமிழகமே சொந்தம் கொண்டாடும்.