சென்னை: மின்கட்டணம் தொடர்பான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாததால், திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் இன்று வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இதுகுறித்து சென்னை மாவட்ட சிறு, குறுந்தொழில் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கே.சந்திரகுமார் கூறியதாவது: தொழில் துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. நாட்டின் தொழில் வளர்ச்சியைஅடுத்த தளத்துக்கு கொண்டு செல்வதில் குறு, சிறு, நடுத்தர தொழில்நிறுவனங்கள் முன்னிலை வகிக்கின்றன. ஆனால், மின்கட்டண உயர்வால் இந்த நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. இதுகுறித்து அரசிடம் பலமுறை முறையிட்டும் தீர்வு கிடைக்கவில்லை. மின்கட்டணம் அடிக்கடி உயர்த்தப்படுவதால், சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் மூடப்படும் அபாயத்தில் உள்ளன.
எனவே, தமிழ்நாடு மின்வாரியம் உயர்த்தியுள்ள 430 சதவீத நிலை கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். பீக் ஹவர் கட்டணம், சோலார்மேற்கூரை நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்தோம்
இந்நிலையில், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின்கட்டண முறைகளை மாற்றி அமைத்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஆனால், அதில் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. எனவே, ஏற்கெனவே திட்டமிட்டபடி, தமிழகம் முழுவதும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் செப்.25-ம்தேதி (இன்று) வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
ஓபிஎஸ் கருத்து: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், தங்களது முக்கியமான கோரிக்கைகள் ஏதும் நிறைவேற்றப்படாத நிலையில், திட்டமிட்டபடி வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று தொழில் துறையினர் அறிவித்துள்ளனர். தமிழக பொருளாதாரத்தையும், சிறு, குறு தொழில் நிறுவனங்களின் தற்போதைய சூழ்நிலையையும் கருத்தில்கொண்டு, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அமைப்புகளை அழைத்துப் பேசி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி விடுத்துள்ள அறிக்கையில், ‘சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளை அரசு அழைத்து பேச வேண்டும்.
மின்கட்டண குறைப்பு உள்ளிட்ட அவர்களின் கோரிக்கைகளை எந்த அளவுக்கு நிறைவேற்ற முடியுமோ, அந்த அளவுக்கு நிறைவேற்ற வேண்டும்’ என கூறியுள்ளார்.