Saturday , December 9 2023
1126371

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு | பழனிசாமிக்கு எதிராக கருத்து கூற உதயநிதிக்கு இடைக்கால தடை | Interim ban on Udhayanidhi comments against Edappadi Palanisamy in Kodanadu case

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்புபடுத்தி கருத்துகளை தெரிவிக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், “கடந்த மாதம் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் சனாதனத்தை ஒழிக்க வேண்டுமென அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். அவரது பேச்சு பெரும் விவாதப்பொருளாக மாறியது. இந்த விவகாரத்தில் உதயநிதி செப்டம்பர் 7-ம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், ‘சனாதனம் என்றால் என்ன’ என்பதை வீட்டினுள் பத்திரமாக அடுக்கிவைத்திருக்கும் புத்தகங்களில் இருந்து நான் தேடிக்கொண்டிருப்பதாக கூறியிருந்தார்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக ஆட்டு தாடியின் பின்னால் நீண்ட நாள் ஒளிந்திருக்க முடியாது என்றும், ஆடு ஒருநாள் காணாமல் போகும்போது, நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள் என்றும் பேசியுள்ளார். அவரது அறிக்கை எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், அவதூறு பரப்பு வகையிலும் உள்ளன. எனவே, என்னை பற்றி பேச அமைச்சர் உதயநிதிக்கு தடை விதிக்க வேண்டும். ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி மஞ்சுளா முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், “ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக விசாரிக்கப்பட்டு வரும், கோடநாடு கொலை,கொள்ளை வழக்கில் ஒருமுறை கூட தன்னை விசாரணைக்கு அழைத்து சம்மன் அனுப்பவில்லை. விசாரிக்கப்படவும் இல்லை. அரசு இயந்திரம் அவர்கள் வசம்தான் உள்ளது. தன்னை அவர்கள் விசாரித்திருக்க வேண்டும்.

மேலும், எந்த ஊழல் வழக்கும் இல்லை. திமுக முக்கிய நிர்வாகி 2018-ல் அளித்த ஊழல் புகாரில் எந்த ஆதாரங்களும் இல்லை என ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை அளிக்கப்பட்டு, அதை அரசும் ஏற்றுள்ளது. இதுதொடர்பான வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுக்களை உதயநிதி, எக்ஸ் வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதை 6 லட்சத்து 72 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். தேர்தல் நேரத்தில் தனக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது” என வாதிடப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, “அரசியல் தலைவர்கள் பரஸ்பரம் அறிக்கைகள் விடுவது வழக்கம்தான். என்றாலும், இந்த வழக்கில் உள்ள ஆதாரங்களில் இருந்து உதயநிதி அறிக்கை அவதூறாக உள்ளது. இதை அனுமதித்தால் மனுதாரருக்கு ஈடுகட்ட முடியாத இழப்பு ஏற்படும். எனவே, இனி இதுபோல அறிக்கைகள் வெளியிடக் கூடாது என உதயநிதி ஸ்டாலினுக்கு தடை விதிக்க ஆரம்பகட்ட முகாந்திரம் உள்ளது” எனக் கூறி, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்துகளை தெரிவிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த மனுவுக்கு 2 வாரங்களில் பதிலளிக்க உதயநிதி ஸ்டாலினுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

Thanks

Check Also

1164932

புதுச்சேரியில் ரூ.393 கோடியில் ப்ரீபெய்டு ஸ்மார்ட் மீட்டர் பொருத்த அரசு அனுமதி – நடைமுறை என்ன? | Govt approves Rs 393 crore prepaid smart meter installation in Puducherry

புதுச்சேரி: புதுச்சேரியில் ரூ.393 கோடியில் ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த அரசு அனுமதி தந்துள்ளது. மின் மீட்டருக்கான பணத்தை 90 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *