புதுடெல்லி: எதிர்வரும் குடியரசு தினவிழா 2024-ல் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடனை, பிரதமர் மோடி அழைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி தெரிவித்துள்ளார்.
குவாட் உறுப்பு நாடுகளுக்கு இடையிலான உச்சி மாநாடு இதோடு சேர்த்து நடைபெறுமா என்ற விவரம் குறித்து தனக்கு தெரியாது எனவும் எரிக் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் அதிபர் பைடனுக்கு, பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளதை அவர் உறுதி செய்துள்ளார். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் குவாட் அமைப்பின் உறுப்பு நாடுகளாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆண்டுதோறும் குடியரசு தினவிழாவின் போது உலக நாடுகளை சேர்ந்த தலைவர்களை சிறப்பு விருந்தினர்களாக இந்தியா அழைப்பது வழக்கம். கரோனா பரவல் காரணமாக கடந்த 2021 மற்றும் 2022-ல் சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்படவில்லை. நடப்பு ஆண்டில் குடியரசு தினவிழா சிறப்பு விருந்தினராக எகிப்து நாட்டு அதிபர் அப்தெல் ஃபதா அல்-சிசி பங்கேற்றார். 2020-ல் அப்போதைய பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, 2019-ல் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா, 2018-ல் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் தலைவர்கள், 2015-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, 2014-ல் அப்போதைய ஜப்பான் பிரதமர் ஷின்சோ, 2013-ல் பூடான் மன்னர் ஜிக்மே கேசர் பங்கேற்றுள்ளனர்.
இவர்கள் மட்டுமல்லாது நெல்சன் மண்டேலா, ஜான் மேஜர், முகமது கடாமி மற்றும் ஜாக் சிராக் போன்ற உலக நாடுகளின் தலைவர்களும் இதற்கு முன்னர் குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.