மதுரை: “கிராம மக்களை கலந்தாலோசித்து தீட்டப்படும் திட்டங்களால் மட்டுமே நிரந்தர வளர்ச்சி சாத்தியமாகும்” என கர்நாடக முன்னாள் முதன்மைச் செயலாளர் எஸ்.எஸ்.மீனாட்சிசுந்தரம் கருத்து தெரிவித்துள்ளார்.
மதுரையில் இன்று தானம் அறக்கட்டளையின் தானம் கல்வி நிலையம் சார்பில் ‘முன்னேறும் வளர்ச்சிக்கான புதியதோர் சமூக நெறியை உருவாக்குதல்’ என்ற தலைப்பில் 5 நாள் கருத்தரங்கம் தொடங்கியது. இதற்கு தானம் அறக்கட்டளை தலைவர் பி.டி.பங்கேரா தலைமை வகித்தார். நிர்வாக இயக்குநர் மா.ப.வாசிமலை முன்னிலை வகித்தார். தானம் கல்வி நிலைய இயக்குநர் கி.குருநாதன் வரவேற்றார்.
இதில், கர்நாடகா மாநில அரசின் முன்னாள் முதன்மைச் செயலாளர் (கிராம வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ்) எஸ்.எஸ்.மீனாட்சி சுந்தரம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது: “வளர்ச்சி என்பது கீழிலிருந்து மேல்நோக்கி வளர்வதுதான் இயற்கை.அந்த வகையில் நாட்டின் வளர்ச்சியும் கிராமப்புறங்களிலிருந்துதான் தொடங்க வேண்டும். பெரும்பாலும் அரசு திட்ட செயலாக்கங்கள் அனைத்தும் மேலிருந்து கீழாக உள்ளது.
அதாவது நகர்ப்புறங்களிலிருந்து கிராமப்புறங்களை நோக்கிச் செல்கி்றது. 1952-ல் இந்திய அரசாங்கமானது வட்டார அளவில் கல்வி, விவசாயம், கால்நடை வளர்ச்சி, நீர்ப்பாசனம் போன்ற திட்டங்களை செயல்படுத்துவதில், கிராமங்களை கலந்து ஆலோசிக்காமல் செய்ததால் நிரந்தர வளர்ச்சி தடைபட்டது. எனவே கிராம மக்களை கலந்தாலோசித்து தீட்டப்படும் திட்டங்களால் மட்டுமே எதிர்காலத்தில் நிரந்தர வளர்ச்சி சாத்தியமாகும்” என்றார்.