தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் நிலக்கடலை வயலைச் சுற்றி வேலியாகக் கட்டப்பட்டு தடதடக்கும் புடவைவேலி தயவால் கடலைக் காய்கள் களம் சேரும் நிலையில் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்துமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், நல்லம்பள்ளி, தருமபுரி, காரிமங்கலம் உள்ளிட்ட வட்டங்களில் மானாவாரி நிலங்களில் மழைக்காலங்களில் விவசாயிகள் பெரும்பாலும் நிலக்கடலை சாகுபடியை அதிக அளவில் மேற்கொள்கின்றனர். பாசன வசதியுள்ள விவசாயிகள் இறவை முறையிலும் நிலக்கடலை சாகுபடியில் ஈடுபடுகின்றனர்.
மேற்குறிப்பிட்ட வட்டங்கள் அனைத்திலும் கணிசமான பரப்பில் வனப்பகுதி அமைந்துள்ளது. தருமபுரி மாவட்ட வனப்பகுதியில் காட்டுப்பன்றிகள் ஏராளமாக உள்ளன. எனவே, வனத்தையொட்டிய விளை நிலங்களில் காட்டுப்பன்றிகள் அதிக அளவில் நுழைந்து வேளாண் பயிர்களை சேதப்படுத்துகின்றன. வேளாண் பணிகளுக்காக பகல் முழுவதும் கடும் உடலுழைப்பை தரும் விவசாயிகள் பன்றிகளிடம் இருந்து பயிர்களைக் காக்க தினமும் இரவில் கண் விழிப்பது இயலாத செயலாகும்.
நிலக்கடலை, மரவள்ளிக் கிழங்கு போன்ற பயிர்களைத் தான் காட்டுப்பன்றிகள் அதிக சேதத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, இவ்வகை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் பன்றிகளை கட்டுப்படுத்த விவசாயிகள் பல்வேறு நுட்பங்களை பின்பற்றி வருகின்றனர். சில வயல்களில் வயல் வரப்புகளில் ஆங்காங்கே உள்ள மரங்களில் கண்ணாடியால் ஆன காலி மதுபாட்டிகளையும், அவற்றுடன் ஆணி போன்ற சிறு இரும்புகளையும் கயிற்றால் கட்டி தொங்க விடுகின்றனர்.
இவை காற்றில் அசைந்து ஏற்படுத்தும் ஓசை காட்டுப்பன்றிகளை அச்சமூட்டி தடுக்கும் என விவசாயிகள் நம்புகின்றனர். இதேபோல, சில இடங்களில் பாட்டில்களுக்கு மாற்றாக பழைய எவர்சில்வர் அல்லது அலுமினிய தட்டுகளையும் தொங்க விடுகின்றனர். இவைதவிர, வயலைச் சுற்றி தரை மட்டத்தில் இருந்து அரை அடிக்கு ஒரு சுற்று வீதம் கட்டுக்கம்பிகளை 3 அல்லது 4 சுற்றுகள் வரை கட்டி வைக்கின்றனர். அதேபோல, வீட்டில் உள்ள பழைய புடவைகளை வயலைச் சுற்றி வேலிபோல் இழுத்துக் கட்டியும் பன்றிகளை தடுக்க முயற்சிக்கின்றனர்.
இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி கோவிந்தசாமி கூறும்போது, ‘கடலைச் செடிகளில் காய்கள் திரண்டு, அறுவடைக்கு தயாராகும் தருணத்திலும், மரவள்ளிச் செடிகளில் கிழங்கு முற்றும் தருணத்திலும் காட்டுப்பன்றிகள் தொல்லை அதிக அளவில் உள்ளது. இரவு நேரங்களில் தான் இவை கூட்டம் கூட்டமாக வயல்களில் இறங்குகின்றன. வயலின் ஒரு மூலையில் விவசாயி காவலுக்கு நின்று விரட்டினால் அவை மற்றொரு மூலைக்கு சென்று சேதப்படுத்துகின்றன.
அவற்றை பின் தொடர்ந்து சென்று விரட்ட முயற்சிக்கும் விவசாயிகளுக்கு கூரிய கோரைப்பற்களைக் கொண்ட காட்டுப்பன்றிகளால் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவேதான், அவற்றின் நடமாட்டத்தை தடுக்க விவசாயிகள் தங்களுக்கு தெரிந்த நுட்பங்களை பின்பற்றுகின்றனர். எங்கள் பகுதியில் பெரும்பாலும் வீட்டில் உள்ள பழையவை முதல் பயன்பாட்டில் உள்ளவை வரை அனைத்து புடவைகளையும் பயன்படுத்தி வேலி அமைக்கிறோம். தரையில் நடப்பட்ட குச்சிகளில் இழுத்துக் கட்டப்படும் புடவைகள் காற்றில் தடதடக்கும்போது ஒருவித ஓசை ஏற்படுகிறது.
இதனால், பன்றிகள் வயலில் நுழைய தயங்குவதால் பயிர்ச் சேதம் ஓரளவு குறைகிறது. இந்த புடவைகளின் தயவால்தான் கடலைக் காய்கள் குறிப்பிட்ட அளவிலாவது களம் சென்று சேருகின்றன. இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் வகையில் காட்டுப்பன்றிகள் விவகாரத்தில் அரசு தெளிவான கொள்கை வகுத்து சிறந்ததொரு முடிவை எடுக்க வேண்டும்’ என்றார்.