Saturday , December 9 2023
1088256

‘கான்ட்ராக்டர் நேசமணி’ முதல் விஜய்க்கு ‘கம்பேக்’ வரை: இயக்குநர் சித்திக் நினைவலைகள் | director siddique demise shocked malaiyalam and tamil industry

தமிழ் சினிமா வரலாற்றில் சில நகைச்சுவை கதாபாத்திரங்கள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ரசிகர்கள் மனதில் நீங்காமல் என்றென்றும் தங்கிவிடும். அந்த படமே மறக்கப்பட்டாலும் கூட அந்த படத்தில் இடம்பெற்ற நகைச்சுவைக் காட்சிகள் தொடர்ந்து நினைக்கூரப்படும். அந்த கதாபாத்திரங்கள் சமூக வலைதளங்களில் மீம்ஸ் வழியே உலவிக் கொண்டிருக்கும். அப்படி ஒரு கதாபாத்திரம்தான் ‘ஃப்ரெண்ட்ஸ்’ படத்தில் இடம்பெற்ற ‘கான்ட்ராக்டர் நேசமணி’. நகைச்சுவை காட்சிகளுக்காகவே இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகும் பேசப்படும் ‘ஃப்ரெண்ட்ஸ்’ படத்தை இயக்கிய சித்திக் உடல்நலக்குறைவால் நேற்று (ஆகஸ்ட் 08) காலமானார்.

80களின் தொடக்கத்தில் கேரளாவில் பிரபலமாக இருந்த கொச்சி கலாபவன் கலைக் குழுவில் மிமிக்ரி கலைஞராக இடம்பெற்றிருந்தார் சித்திக். அதே குழுவில் இருந்த மற்றொரு கலைஞர் லால். மேடையில் இருவரது திறமையையும் கண்டு வியந்த இயக்குநர் ஃபாசில் இருவரையும் தன்னுடைய உதவியாளர்களாக சேர்த்துக் கொண்டார். இதுவே மலையாள சினிமாவில் பெரும் வெற்றிப் படங்களை தந்த சித்திக் – லால் கூட்டணிக்கு அடித்தளம் அமைத்தது.

சித்திக் – லால் கூட்டணி முதன்முதலாக 1986ல் மோகன்லால் நடித்து வெளியான ’பப்பன் பிரியப்பட்ட பப்பன்’ படத்துக்கு கதை திரைக்கதை எழுதியது. தொடர்ந்து மோகன்லால் நடித்த ’நாடோடிக்காட்டு’. அதன் பிறகு 1989ல் ‘ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்’ என்ற படத்தை சித்திக் – லால் இணைந்து இயக்கியிருந்தனர். ஃபாசில் தயாரித்திருந்த இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தை தமிழில் ‘அரங்கேற்ற வேளை’ என்ற பெயரில் ஃபாசில் ரீமேக் செய்தார். இந்தியில், ’ஹெரா ஃபெரி’ என்ற பெயரில் பிரியதர்ஷன் ரீமேக் செய்தார்.

லால் – சித்திக்

தொடர்ந்து இந்த கூட்டணி, ‘இன் ஹர்ஹர் நகர்’, ‘காட்ஃபாதர்’, ‘வியட்நாம் காலனி’, ‘காபூலிவாலா’ உள்ளிட்ட ப்ளாக்பஸ்டர் படங்களை இயக்கியது. ’காபூலிவாலா’ படத்துக்குப் பிறகு சித்திக் – லால் கூட்டணி உடைந்தது. லால் நடிப்பில் கவனம் செலுத்த, சித்திக் தொடர்ந்து திரைப்படங்களை இயக்கி வந்தார். இயக்கத்தில் பிரிந்தாலும் சித்திக்கின் சில படங்களை லால் தயாரிக்கவும் செய்தார். 1996ஆம் ஆண்டு மம்முட்டி நடிப்பில் சித்திக் இயக்கிய ‘ஹிட்லர்’ படத்தை லால் தயாரித்திருந்தார். 1999ஆம் ஆண்டு லால் தயாரிப்பில், சித்திக் இயக்கிய ‘ஃப்ரெண்ட்ஸ்’ படம் பெரும் ஹிட்டடித்தது. இப்படம் இதே பெயரில் தமிழில் ரீமேக் ஆகி அசல் படத்தை விஞ்சும் அளவுக்கு ப்ளாக்பஸ்டர் ஆனது. வடிவேலு நடித்த ‘கான்ட்ராக்டர் நேசமணி’ கதாபாத்திரம் காலத்தால் அழியாத காமெடி கதாபாத்திரமாக தமிழ் சினிமா வரலாற்றில் இடம்பெற்றது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு #PrayForNesamani என்ற ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்ட் ஆகும் அளவுக்கு இந்த கதாபாத்திரத்தின் மீதான தமிழ் மக்களின் ஈர்ப்பு அளப்பறியது. இந்த கதாபாத்திரம் பேசும் ஒவ்வொரு வசனமும் தமிழ் ரசிகர்களுக்கு மனப்பாடம். ஒரு தனிப் படமாகவே எடுக்கும் அளவுக்கு சித்திக்கால் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இந்த கதாபாத்திரத்துக்கு வடிவேல் தனது அசாத்திய உடல்மொழியால் உயிர் கொடுத்திருப்பார். இதே போல தமிழில் சித்திக் இயக்கிய ‘எங்கள் அண்ணா’ படத்தில் வடிவேலு நடித்த ‘மயிலு’ கதாபாத்திரமும் மிகப் பிரபலம்.

16915570391138

தொடர்ந்து சித்திக் இயக்கிய ‘க்ரோனிக் பேச்சிலர்’ (தமிழில் ‘எங்கள் அண்ணா’), ’சாது மிரண்டா’, ‘பாடிகார்ட்’ உள்ளிட்ட படங்களை இயக்கினார். ‘வில்லு’, ‘குருவி’, ‘சுறா’, ‘வேட்டைக்காரன்’ என அடுத்தடுத்த தோல்வியை எதிர்கொண்ட விஜய்க்கு ஒரு ஹிட் தேவைப்பட்ட நேரத்தில் ‘பாடிகார்ட்’ படத்தை ‘காவலன்’ என்ற பெயரில் ரீமேக் செய்து விஜய்க்கு கம்பேக் கொடுத்தார் சித்திக். இப்படத்தில் பல வருடங்களுக்கு ஆர்ப்பாட்டம், பஞ்ச் டயலாக் இல்லாத ஒரு அமைதியான ரொமாண்டிக் விஜய்யை பார்க்க முடிந்தது. இதே படத்தை ‘பாடிகார்ட்’ என்ற பெயரில் சல்மான் கானை வைத்து இந்தியில் ரீமேக் செய்தார். அந்த படமும் சூப்பர் ஹிட் ஆனது.

93ல் பிரிந்த சித்திக் – லால் கூட்டணி மீண்டும் 2016ல் வெளியான ‘கிங் லயர்’ படம் மூலம் இணைந்தது. இப்படத்துக்கு சித்திக் கதை, திரைக்கதை எழுத லால் இயக்கியிருந்தார். 2020ல் வெளியான ‘பிக் பிரதர்’ படம்தான் சித்திக் இயக்கிய கடைசிப் படம். இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் பல படங்களில் தலைகாட்டியிருப்பார் சித்திக். ஃபாசில் இயக்கத்தில் 1989ல் வெளியான ’வருஷம் 16’ படத்தில் கார்த்திக்கின் நண்பர்களின் ஒருவராக வருவார்.

16915570861138

கொரோனா காலகட்டத்தில் சித்திக்கின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக நிம்மோனியா மற்றும் கல்லீரல் பிரச்சினைக்காக தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்தார். கடந்த திங்கள் (ஆகஸ்ட் 7) அன்று கடுமையான மாரடைப்பு ஏற்பட்டதால் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அங்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று சித்திக் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இந்த செய்தி மலையாளம் மட்டுமின்றி தமிழ் திரையுலகத்தையும் உலுக்கியுள்ளது.

மலையாளம் மற்றும் தமிழில் மறக்கமுடியாத எண்ணற்ற திரைப்படங்களையும் கதாபாத்திரங்களை உருவாக்கிய சித்திக்கின் பெயர் சினிமா வரலாற்றில் என்றென்றும் நினைவுகூரப்படும்.

Thanks

Check Also

1164923

“பெண்கள் மீதான வெறுப்பை நியாயப்படுத்துவது வெட்கக்கேடு” – ‘அனிமல்’ படம் குறித்து காங். எம்.பி காட்டம் | Rajya Sabha MP Ranjeet Ranjan Slams Animal Disease to Society

புதுடெல்லி: “சினிமாவில் பெண்கள் மீதான வெறுப்பு மற்றும் வன்முறையை நியாயப்படுத்துவது வெட்கக்கேடானது” என காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ரஞ்சீத் ரஞ்சன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *