புதுடெல்லி: இந்திய உறவா அல்லது கனடா உறவா என முடிவெடுக்க வேண்டிய நிலை வந்தால், அமெரிக்கா இந்தியாவுக்குதான் ஆதரவு அளிக்கும் என்று அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின் தெரிவித்தார்.
கனடாவின் வான்கூவர் நகரில் காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜார் (45) கடந்த ஜூன் மாதம் சுட்டு கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக கனடா நாட்டுஅதிபர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றம்சாட்டினார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் இரு நாடுகளுக்கிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த பிரச்சினையில் தங்களோடு இணையுமாறு அமெரிக்காவுக்கு கனடா அழைப்புவிடுத்தது. இதுகுறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின் தெரிவித்ததாவது: கனடாவின் இந்த குற்றச்சாட்டு,இந்தியாவை விட கனடாவுக்குத்தான் அதிக அபாயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய உறவா அல்லது கனடா உறவா என முடிவெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அமெரிக்கா இந்தியாவுடன்தான் துணை நிற்கும்.
இரண்டு நண்பர்களுக்கிடையில் நாம் தேர்வு செய்ய வேண்டியிருந்தால், நிஜார் ஒரு தீவிரவாதி என்பதாலும், இந்தியா மிகவும் முக்கியமானது என்பதாலும் இந்த விஷயத்தில் இந்தியாவைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம். இந்தியாவுடனான உறவு எங்களுக்கு முக்கியமானது. கனடா,இந்தியாவோடு சச்சரவில் ஈடுபடுவது, ஒரு எறும்பு, யானையுடன் சண்டையிடுவது போலாகும். தனது குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரத்தை தர அதிபர் ஜஸ்டின் ட்ரூடோவால் முடியவில்லை. இந்தியாவால் தீவிரவாதி என முத்திரை குத்தப்பட்ட ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்தது எதற்காக என்பது தொடர்பாக கனடா நாடு விளக்க கடமைப்பட்டுள்ளது. பிளம்பராக வேலை செய்து வந்தகொல்லப்பட்ட நி்ஜார் ஒன்றும் சுத்தமான மனிதரல்ல; அவரது கரங்கள் ரத்தக்கறை படிந்தவை. போலி பாஸ்போர்ட் மூலம் கனடாவுக்கு வந்தவர்தான் நிஜார். இவ்வாறு மைக்கேல் ரூபின் கூறியுள்ளார்.
காலிஸ்தான் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்க முன்னாள் அதிகாரி ஒருவர் பேசியுள்ளது கனடாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.