திருச்சி: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கத்தின் 3-வது மாநில பிரதிநிதித்துவப் பேரவை கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது.
மாநிலத் தலைவர் ச.ராமமூர்த்தி தலைமை வகித்தார். கவுரவத் தலைவர் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தார். வரவேற்புக் குழுத் தலைவர் செந்தமிழ்ச்செல்வன் வரவேற்றார்.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் செல்வம் பேரவை கூட்டத்தை தொடங்கிவைத்து பேசியது: தேர்தலின்போது முதல்வர் ஸ்டாலின் அளித்த பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட நமது முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. போராட்டம் மூலமே நமது கோரிக்கைகளை வெல்ல முடியும் என்றார்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும்ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் பா.ரவி பேசியது: அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை காலவரையறை இன்றி இழுத்துக் கொண்டே செல்வதைக் கைவிட வேண்டும்.
தமிழகம் முழுவதும் பணியின் கடைசி நாளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் 160 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை விரைவாக விசாரித்து முடித்து தீர்வு காண வேண்டும்.தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், 70 வயது ஆனவர்களுக்கு தமிழக முதல்வர் 10 சதவீதம் கூடுதலாக ஓய்வூதியம் வழங்க வேண்டும். எங்களது கோரிக்கைகளை மக்களவைத் தேர்தலுக்குள் அரசு நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க நேரிடும் என்றார்.
இந்தக் கூட்டத்தில், ‘‘பணி ஓய்வுபெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யக் கூடாது என்ற அரசாணையை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள பல்வேறு முரண்பாடுகளைக் களைந்து, கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்த வேண்டும்.மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைதமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்’’ என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், திருச்சி மாவட்டகருவூல அலுவலர் க.பாபு, பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பி.கிருஷ்ணமூர்த்தி, பாரி, கென்னடிபூபாலராயன் உட்பட பலர் பங்கேற்றனர். தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநிலத் தலைவர் சீதரன் நன்றி கூறினார்.