Tuesday , November 28 2023
1126806

எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம்: சபாநாயகரிடம் அதிமுகவினர் கடிதம் | AIADMK MLAs met Speaker Appavu at Secretariat

சென்னை: சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு கொடுக்கிறீர்களா? இல்லையா? என்பதை கடிதம் மூலம் எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

வருகின்ற அக்டோபர் 9-ம் தேதி தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. இந்நிலையில், தலைமைச் செயலகத்தில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் சபாநாயகர் அப்பாவுவை வெள்ளிக்கிழமை தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர். பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியது: “அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுகவினர் அனைவரும் ஒருங்கிணைந்து தீர்மானம் நிறைவேற்றி, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்க வேண்டும் என்று,ஏற்கெனவே இரண்டு முறை சபாநாயகரிடம் கடிதம் அளித்திருந்தோம். இன்று மூன்றாவது முறையாக கடிதம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதுவரையில் சபாநாயகர், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை வழங்குவது, பரிசீலனையில் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். எங்களைப் பொறுத்தவரையில், நீங்கள் எங்களுக்கு ஒதுக்க வேண்டிய இடத்தை, இதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி நடந்தபோது, எதிர்க்கட்சித் தலைவராக இன்றைய முதல்வர் ஸ்டாலின், துணைத் தலைவராக இன்றைய நீர்வளத்துறை அமைச்சரான துரைமுருகனுக்கு இருக்கை ஒதுக்கி ஆணை பிறப்பிக்கப்பட்டது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், எதிர்க்கட்சித் தலைவராக தேமுதிக தலைவர் விஜயகாந்தும், துணைத் தலைவராக பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோருக்கு ஒதுக்கி ஆணை பிறப்பிக்கப்பட்டது. இது சட்டமன்ற விதி, மரபின் அடிப்படையில் நிறைவேற்றப்படும் ஒன்றாக இருந்து வருகிறது.

அதிமுக உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், இயங்கும் இந்த இயக்கத்துக்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்க வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் அதனை பரிசீலிப்பதாக கூறியிருக்கிறார்.

நாங்கள் கொடுத்துள்ள கடிதத்தில், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை எங்களுக்கு கொடுக்கிறீர்களா? இல்லையா? என்பதை கடிதம் மூலம் எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று தெளிவாக வலியுறுத்தியுள்ளோம். கடிதத்துக்கான பதில் கிடைத்தவுடன் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எடுப்பார்” என்று அவர் கூறினார்.

முன்னதாக, வரும் அக்டோபர் 9-ம் தேதி தொடங்கவுள்ள சட்டமன்ற கூட்டத் தொடரில், ஆர்.பி. உதயகுமாருக்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை வழங்க வலியுறுத்தி, சபாநாயகர் அப்பாவுவை அதிமுக மூத்த நிர்வாகிகள் சந்தித்து மனு அளித்தனர். கடந்தாண்டு ஜூலை மாதம் முதல், அதிமுகவினர் ஆர்.பி.உதயகுமாருக்கு துணைத் தலைவர் இருக்கையை வழங்க வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Thanks

Check Also

1160110

திமுக கூட்டணி கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வரும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தகவல் | dmk alliance parties will come to admk alliance

சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வரும்என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *