சென்னை: தமிழக மின்வாரியத்துக்கு எண்ணூரில் 450 மெகாவாட் திறனில் அனல்மின் நிலையம் இருந்தது. இதன் ஆயுட் காலம் முடிவடைந்ததால் கடந்த 2017-ம் ஆண்டு முதல் நிரந்தரமாக மின்னுற்பத்தி நிறுத்தப்பட்டது. புதிதாக 2 ஆயிரம் மெகாவாட் திறனில் எரிவாயு மின்நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பு கடந்த 2021-ம் ஆண்டு வெளியானது. மேலும், மின்நிலையம் அமைப்பதற்கானவிரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிதனியார் நிறுவனத்திடம் கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. அந்நிறுவனம் கடந்த மார்ச் மாதம்திட்ட வரைவு அறிக்கையைச் சமர்ப்பித்தது.
அறிக்கையில் இடம் பெற்றிருந்த மின்னுற்பத்தி செலவு உள்ளிட்டவை தொடர்பாக மின்வாரியம் பல விளக்கங்களைக் கேட்டது.அதற்கு ஏற்ப கூடுதல் விவரங்களுடன் கூடியஇறுதி விரிவான திட்ட அறிக்கை மின்வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில், இம்மாத இறுதியில் மின்வாரிய இயக்குநர்கள் குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. அதில், மின்நிலைய திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் பெறப்பட்டு, பின்னர் தமிழகஅரசின் அனுமதி பெறப்படும். பிறகு, கட்டுமானப் பணிகள் அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்துக்குள் தொடங்கி 2 ஆண்டுகளுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.