சென்னை: ஊழல், முறைகேடு உட்பட 5-சி கொண்டதுதான் பாஜக ஆட்சி. மோடி சொன்ன திறமை, வர்த்தகம் உள்ளிட்ட 5-டி கொண்டதாக இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், ‘வஞ்சிக்கும் பாஜக.வை வீழ்த்துவோம். இந்தியாவை மீட்டெடுப்போம்!’ என்ற தலைப்பில் இந்தியாவுக்காகப் பேசுவோம் (Speaking for India) பாட்காஸ்ட்டின் (ஆடியோ சீரிஸ்) முதல் அத்தியாயத்தை கடந்த 4-ம் தேதி வெளியிட்டு இருந்தார். இந்தியாவுக்காகப் பேசுவோம்இரண்டாவது அத்தியாயத்தை முதல்வர் வெளியிட்டார்.
அதில், அவர் பேசியிருப்பதாவது: நம்முடைய நாடும் – நாட்டு மக்களும் மீண்டும் பாஜகவிடம் ஏமாந்துவிடக் கூடாது என்றுதான் இந்த இந்தியாவுக்காகப் பேசுவோம் பாட்காஸ்ட் சீரிஸ்-ஐ தொடங்கியிருக்கிறேன். 2014-ம் ஆண்டு ஏமாந்ததுபோல், 2019-ம் ஆண்டு ஏமாந்ததுபோல், 2024-ம் ஆண்டும் நாடு ஏமாந்துவிடக்கூடாது. தன்னைவளர்ச்சியின் நாயகனாக காட்டிக்கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி. “60 ஆண்டுகள் இந்தியாவை காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்திருக்கிறது. எனக்கு 60 மாதம் கொடுங்கள். நான் இந்தியாவை வளர்ச்சி மிகுந்த நாடாக மாற்றுவேன்” என்றுசொன்னார் மோடி. அவருக்கு 60 மாதம் மட்டுமில்லை, கூடுதலாக, இன்னொரு 60 மாதம் ஆட்சி செய்கிற அளவுக்கு வாய்ப்பை இந்திய மக்கள் வழங்கினர். வளர்ச்சி மிகுந்த நாடாக மாற்றிவிட்டாரா என்பதற்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும்.
5 T-தான் எனக்கு முக்கியம் என்று முதல் முறை பிரதமர் ஆன போது மோடி சொன்னார். 1.Talent – திறமை, 2.Trading – வர்த்தகம், 3.Tradition – பாரம்பரியம், 4.Tourism –சுற்றுலா, 5. Technology – தொழில்நுட்பம். இந்த 5 T-யில் ஒன்றாவது நிறைவேற்றப்பட்டிருக்கிறதா?. என்னைப் பொறுத்தவரையில், 5C-க்கள் கொண்டதாகத்தான் இன்றைய பாஜக ஆட்சி இருக்கிறது. 1. Communalism– வகுப்புவாதம், 2. Corruption – ஊழல் முறைகேடுகள், 3. Corporate Capitalism – மூலதனக் குவியல், 4. Cheating – மோசடி, 5.Character Assassination – அவதூறுகள். இந்த 5 C-க்கள் கொண்ட ஆட்சி இது. இப்படித்தான் சொல்லமுடியும். இதை இதுவரை விளம்பர வெளிச்சங்கள் மூலமாக பாஜக மறைத்து வந்தது. ஆனால் இப்போது உருவான இண்டியா கூட்டணியும், இண்டியா கூட்டணி தலைவர்களின் பரப்புரையும் பாஜக கட்சியின் முகத்திரையை, பிரதமர் நரேந்திர மோடி என்ற பிம்பத்தை கிழித்து விட்டது. இதை நாங்கள் அரசியலுக்காக சொல்லவில்லை. உண்மையான தரவுகளின் அடிப்படையில் தான் சொல்கிறோம் என்று சிஏஜி அறிக்கை அம்பலப்படுத்திவிட்டது.
அயோத்தியா திட்டம் முதல் ஆயுஷ்மான் பாரத் திட்டம் வரை எல்லாவற்றிலும், 7.5 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக சிஏஜி அளவிட்டிருக்கிறார்கள். இதுவரைக்கும் இதற்கு பிரதமரோ, சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர்களோ பதில் சொல்லவில்லை. அதனால்தான் இதில் இருந்து மக்களை திசை திருப்ப வெவ்வேறு அரசியலை கையில் எடுக்கிறார்.
2024 தேர்தலில், பாஜக ஒட்டுமொத்தமாக வீழ்த்தப்பட வேண்டும். பாஜகவின் வகுப்புவாத, ஊழல், கார்ப்பரேட் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்திய நாட்டு மக்கள் அனைவரும் ஒரேகுரலாக முழங்க வேண்டும். தொடர்ந்து இந்தியாவுக்காகப் பேசுவோம், இந்தியாவைக் காப்போம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.