மொகாலி: எதிர்வரும் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் நிச்சயம் சூர்யகுமார் யாதவ் இருப்பார் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட் தெரிவித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவின் ஃபார்ம் குறித்து பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் திராவிட் இதனை தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெறவுள்ளது. தொடரை இந்தியா நடத்துகிறது. போட்டியில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த தொடருக்கான 15 வீரர்கள் இடம்பெற்றுள்ள இந்திய அணியில் வலது கை சுழற்பந்து வீச்சாளர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்னதாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணியுடன் இந்தியா விளையாடுகிறது.