கோவை: கோவை தொழில் முனைவோர் இலங்கையில் முதலீடு செய்ய முன் வரவேண்டும் என, தென்னிந்தியாவுக்கான இலங்கை துணை தூதர் அழைப்பு விடுத்தார்.
இந்திய தொழில் வர்த்தக சபை (கோவை) சார்பில் தென்னிந்தியாவுக்கான இலங்கை துணை தூதர் வெங்கடேஸ்வரன் பங்கேற்ற சிறப்புக் கூட்டம், அவிநாசி சாலையிலுள்ள தொழில் வர்த்தக சபை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்திய தொழில் வர்த்தக சபை கோவை துணைத் தலைவர் ராஜேஷ் டி லுந்த் தலைமை வகித்தார்.
இதில் தென்னிந்தியாவுக்கான இலங்கை துணை தூதர் வெங்கடேஸ்வரன், வணிக மேம்பாட்டு பிரிவு அதிகாரி ஞானதேவா ஆகியோர் பேசியதாவது: தீவு நாடான இலங்கை, அண்டை நாடுகளான இந்தியா, சீனா, பாகிஸ்தான் மட்டுமின்றி ஈரான், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளுடனும் நட்புடன் செயலாற்ற விரும்புகிறது. இந்தியா, பாகிஸ்தான், ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுடன் இலவச வர்த்தக ஒப்பந்தம் (எப்டிஏ) திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
எங்கள் நாட்டில் பல்வேறு பொருட்கள் மிகப்பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. மூலப் பொருட்கள் குறைவு, பணியாட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. குறைந்த அளவு பொருட்களை உற்பத்தி செய்த போதிலும், அவை சிறந்த தரத்துடன் விளங்குகின்றன. அதனால் விலை சற்று அதிகமாக இருக்கும். இலங்கையில் இருந்து ஜவுளி, தொழிற்சாலை பயன்பாட்டுக்கான ரப்பர் டயர், டீ, மீன், செராமிக் பொருட்கள், மசாலா பொருட்கள் உள்ளிட்ட பல வகையான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இலங்கையில் இருந்து மிக அதிகளவு குறுமிளகு இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகிறது.
இது தவிர பிரியாணி உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் பல வகையான மசாலா பொடிகள், இலங்கையில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கட்டணங்கள் அதிகம் உள்ளபோதிலும் இலங்கையில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு இங்கிலாந்து, ஜெர்மனி, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாட்டினர் அதிக எண்ணிக்கையில் வருகை தருகின்றனர்.
.
இந்தியர்களும் அதிகம் வருகின்றனர். இலங்கையில் ரியல் எஸ்டேட், கட்டுமான துறையில் நல்ல வளர்ச்சி காணப்படுகிறது. வீடுகள் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான தேவை அதிகம் உள்ளது. அரசு சார்பில் பல்வேறு வரிச்சலுகைகள் வழங்கப்படுவது உள்ளிட்ட காரணங்களால் டாடா உள்ளிட்ட இந்திய நிறுவனங்கள் ஏற்கெனவே இலங்கையில் மிகப்பெரிய அளவில் கட்டுமான திட்டங்களில் முதலீடு செய்து பணிகளை தொடங்கியுள்ளன. இலங்கையில் தயாரிக்கப்படும் ஸ்பா பொருட்களுக்கு உலகெங்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகச்சிறப்பான வரவேற்பு உள்ளது.
மேலும், சுற்றுலா செல்வதற்கான படகு, மீன் பிடிக்க உதவும் படகு உள்ளிட்ட கட்டுமானம் சிறப்பான வளர்ச்சி பெற்றுள்ளது. இலங்கை தொழில் வளர்ச்சிக்கு உதவும் வகையில், 13 தொழிற்பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு சார்பில் வழங்கப்படும் சலுகைகள், அதிக வருமானம் ஈட்டும் வசதி உட்பட பல்வேறு நன்மைகள் உள்ளதால், தொழில் முனைவோர் இலங்கையில் முதலீடு செய்து பயன்பெறலாம். இவ்வாறு அவர்கள் பேசினர்.