Tuesday , November 28 2023
1153790

இரு நாட்கள் பெய்த தொடர் மழையால் பாகூர் பகுதியில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின | Due to Continuous Rains for Two Days, Paddy Crops were Submerged on Water on Bahour Area

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தின் நெற்களஞ்சியமான பாகூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

புதுச்சேரி நகரப் பகுதியைப் போலவே ஊரகப் பகுதிகளிலும் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக பாகூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் பிற்பகல் முதலே மழை பெய்யத் தொடங்கியது. தொடர் மழையால், இப்பகுதியில் வாய்க்கால்கள் நிரம்பி, தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக சித்தேரி வாய்க்காலில் தண்ணீர் அதிகரிப்பால், சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் விளை நிலங்களுக்குள் புகுந்துள்ளது.

பாகூர் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் புதிதாக நடவு செய்த நெற்பயிர்களில் அதிகளவு தண்ணீர் புகுந்துள்ளது. கடலூர் – புதுச்சேரி சாலையில் குறிப்பிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் இந்தப் பகுதியில் வாகனங்கள் ஊர்ந்து சென்று வருகின்றன. மேலும் புதிதாகபோடப்பட்ட இப்பகுதி சாலையில், ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு சேதமடைந்துள்ளன. தொடர் மழையால் பாகூர் ஏரியின் கொள்ளளவு 2.80 மீட்டர் வரை உயர்ந் துள்ளது.

கன்னியக்கோயில் பகுதியில் அமைந்துள்ள மணப்பட்டு தாங்கல் ஏரி முழு கொள்ளளவை எட்டி, கடந்த சில தினங்களாக வழிந்த நிலையில், தற்போது தண்ணீர் வெளியேறி வருகிறது. பொதுப் பணித்துறை அளவீட்டின்படி, பாகூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

சாலை பணியால் பாதிப்பு: விழுப்புரம் – நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை பாகூர் வழியே அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை பணி முழுமை அடையாததால் மழை நீர் வடிவதற்கு வழி இல்லாமல் விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கி வருகிறது. இதனால் பாகூர், அரங்கனூர், சேலியமேடு,கரிக்கலாம்பாக்கம், பின்னாச்சிகுப்பம், கன்னியக்கோயில் பகுதிகளில் உள்ளவிளை நிலங்கள் மழை நீரில் மூழ்கி கடல் போல் காட்சி அளிக்கிறது.

தொடர்ந்து மழை பொழிந்து வருவதால் அதிக அளவு விவசாய நிலங்கள் சேதம் அடைய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது. புதுச்சேரியில் நேற்று முன்தினம் இரவு முதல் கன மழை பெய்து வருகிறது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், அக்டோபர் 1-ம் தேதி முதல் நேற்று வரை பதிவான மழையின் சராசரி அளவு 23 செ.மீ. இந்த காலக் கட்டத்தின் இயல்பான அளவு 27 செ.மீ ஆகும். தற்போது பெய்துள்ள மழையும் இயல்பை விட குறைவு தான். எனினும் இரு நாட்களில் பெய்த தொடர் மழைப் பொழிவால் புதுச்சேரியில் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

படகு சவாரி நிறுத்தம்: தொடர்ந்து மழை பெய்து வருவதால் சுண்ணாம்பாற்றில் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக புதுச் சேரி அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் செயல்படும் நோணாங்குப்பம் படகு குழாமில் படகு சவாரி நேற்று நிறுத்தப்பட்டது. மேலும் சுண்ணாம்பாறு முகத்துவாரப் பகுதியில் மண்ணரிப்பு ஏற்பட்டு, கரை உடையும் அபாயம் ஏற்பட்ட நிலையில் பொதுப் பணித்துறை அதிகாரிகள் நேற்று அங்கு ஆய்வு செய்தனர்.

பொக்லைன் இயந்தி ரத்தின் உதவியோடு முகத்துவராம் பகுதியை வெட்டி விட நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். தொடர் மழையால் ஆற்றின் கரையோர கிராமங்களான சின்ன வீராம்பட்டினம், ஓடைவெளி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளை நிலங்களிலும் தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. தவளக் குப்பத்தை அடுத்த பூரணாங் குப்பம் பகுதியில் ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள விளை நிலங்களிலும் மழைநீர் புகுந்துள்ளதால் ஏராளமான வேளாண் பயிர்கள் சேதம் அடையும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

Thanks

Check Also

1160324

கற்பிப்பதா, லேப்டாப்களை பாதுகாப்பதா? – அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பணி குறித்து ஐகோர்ட் சரமாரி கேள்வி | High Court talks on School HMs

மதுரை: “அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களின் பணி கல்வி கற்பிப்பதா? லேப்டாப்களை பாதுகாப்பதா?” என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *