நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த திடீர் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து மக்களை அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் சூழல் உருவானது. வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, நாக்பூர் விமான நிலையப் பகுதியில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் 106 மில்லி மீட்டர் மழை பெய்திருந்தது. திடீர் கனமழையால் நகரின் பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. முன்னெச்சரிக்கையாக இன்று நாக்பூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தனது எக்ஸ் பக்கத்தில், மழை நிலவரத்தை தொடர்ந்து கவனித்து வருவதாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும், இடைவிடாத கனமழையால் அம்பாசாரி ஏரி நிரம்பி வழிகிறது. இதனால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தாழ்வான வசிப்பிடங்கள் நீரால் சூழப்பட்டுள்ளன. நகரின் பிற பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன என்று கூறியிருந்தார்.