Tuesday , November 28 2023
1127764

இன்று விநாயகர் சிலை ஊர்வலம்: சென்னையில் பலத்த பாதுகாப்பு | Lord Ganesha Statue Procession Today: Tight Security on Chennai

சென்னை: சென்னையில் இன்று விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுவதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்று, நீர்நிலைகளில் சிலை கரைப்பு நிகழ்வுகள் நடந்து வருகின்றன. சென்னையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.

இதில் 1,500 சிலைகள் பிரம்மாண்டவையாகும். கடந்த சில நாட்களாக விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன. கடைசி நாளான இன்று 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட உள்ளன. இந்நிலையில், சென்னையில் நடைபெற இருக்கும் விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் சிலை கரைப்பு இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதன்படி, பட்டினப்பாக்கம் கடற்கரையில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகள், சிலைகளை கடலில் எடுத்து செல்லப்படும் கிரேன், மின்விளக்கு, படகு, மருத்துவ முகாம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது: சென்னையில் நாளை (இன்று) பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு உட்பட 4 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட உள்ளன. இதற்காக சென்னையில் 17 வழித்தடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் சுமார் 1,500 சிலைகளும், ஆவடி, தாம்பரத்தில் இருந்து சுமார் 500 சிலைகள் என 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிலைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களில் சிலைகளை கொண்டுவர வேண்டும். சென்னை, ஆவடி, தாம்பரத்தில் பாதுகாப்புக்காக 22 ஆயிரம் போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கடலில் சிலைகளை கரைப்பதற்காக ட்ராலி, கிரேன் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்திய கடலோர காவல் படை, தமிழக கடலோர பாதுகாப்புப் படை, தமிழ்நாடு தீயணைப்புத் துறை, சென்னை மாநகராட்சி, காவல்துறை உள்பட பல்வேறு துறைகளுடன் நீச்சல் தெரிந்த வீரர்கள், தன்னார்வலர்கள், மீனவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர்.

அனுமதிக்கப்பட்ட 17 வழிதடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. அதன் மூலம் விநாயகர் சிலை ஊர்வலங்கள் கண்காணிக்கப்படும். சிசிடிவி கேமராக்கள் இல்லாத இடங்களில் நடமாடும் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது, பாதுகாப்புக்காக போலீஸாரும் உடன் வருவார்கள்.

மேலும், சிலை கரைப்பு இடங்களில் மருத்துவ முகாம்கள், 108 ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Thanks

Check Also

1160110

திமுக கூட்டணி கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வரும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தகவல் | dmk alliance parties will come to admk alliance

சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வரும்என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *