Tuesday , November 28 2023
1153257

இந்திய வளர்ச்சிக்கும் சர்க்கரை, ஜங்க் ஃபுட் பழக்கம் அச்சுறுத்தல்: தலைமை பொருளாதார ஆலோசகர் எச்சரிக்கை | Sugar, junk food craze a threat to India’s growth – Chief Economic Adviser warns

கோவை: ‘‘அதிக சர்க்கரை, கலோரிகள் நிறைந்த ஜங்க் ஃபுட் உணவு பழக்கம் உடல் நலனை பாதிப்பது மட்டுமின்றி எதிர்கால இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும். சத்தான பழங்கால உணவு முறைக்கு அனைவரும் மாறுவது அவசியம்” என்று இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் தெரிவித்தார்.

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை சார்பில் ‘இந்திய பொருளாதார வளர்ச்சியின் கதை’ என்ற தலைப்பில் சிறப்பு கூட்டம் அவிநாசி சாலையில் உள்ள தொழில் வர்த்தக சபை வளாகத்தில் நடந்தது. இதில் கலந்துகொண்டு இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் பேசியதாவது: “இந்திய உள்நாட்டு மொத்த உற்பத்தி(ஜிடிபி) எண் ஆறு முறை கணக்கிடப்படும். இது, ஏப்ரல் முதல் ஜூன் வரை 7.8 சதவீதமாக இருந்தது. இருப்பினும் ஆறாவது மதிப்பீடு மூன்றாண்டுகள் கழித்து வரும். 2024 மார்ச் வரையிலான நடப்பு நிதியாண்டுக்கான ஆறாவது மதிப்பீடு 2027-ல் தான் வெளிவரும். கரோனா தொற்றுக்கு பின் அதனால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து மீண்டு வந்ததில் உலகளகளவில் இந்தியா சிறப்பிடம் பெற்றுள்ளது.

இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைதான் இதற்கு காரணம். மேற்கத்திய நாடுகள் செய்த தவறுகள் காரணமாக தற்போது பொருளாதார மந்தநிலையை அவை எதிர்கொண்டுள்ளன. இந்தியாவில் கார் விற்பனை அதிகரித்துள்ளது. உள்நாட்டு விமான போக்குவரத்து கரோனா தொற்றுக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளது. ரியல் எஸ்டேட் துறை மீண்டு வருகிறது. நகர்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் 12,800 மக்களிடம் ஆகஸ்ட் மாதம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. நவம்பர் மாத முடிவுகள் வெளிவரவில்லை. ஆகஸ்ட் மாத கணக்கெடுப்பின்படி கிராமப்புற பகுதிகளில் உள்ள மக்கள் வாஷிங் மெஷின், பிரிட்ஜ், மொபைல் போன் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டியுள்ளனர்.

நகர்புறங்களுடன் ஒப்பிடுகையில் கிராமப்புறங்களில் மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகள் முன்னேற்றம் காண தொடங்கியுள்ளன. சில பகுதிகளில் கிராமப்புறங்கள் நகர்புற பகுதிகளை விட சிறப்பாகவே உள்ளது கணக்கெடுப்பின் முடிவில் தெரியவந்துள்ளது. கிராமப்புற மக்கள் எதிர்கால வளர்ச்சி குறித்து அதிக நம்பிக்கையுடன் பதில் அளித்துள்ளனர். உணவு பொருட்கள் விற்பனை 2011-12-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் குறைந்துள்ளது. நிதி வசதி அதிகரித்தால் உணவு பொருட்கள் தேவை குறைவதும், ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டப்படும். உற்பத்தித் துறை சார்ந்த தொழில்துறையினர் தெரிவித்துள்ள கருத்துக்களின் அடிப்படையில் இந்தியாவில் தற்போது வேலைவாய்ப்பு திருப்தியளிக்கும் வகையில் உள்ளது. எதிர்வரும் காலங்களுக்கும் இது தொடரும் என கணக்கிடப்பட்டுள்ளது.

பணவீக்கம் கடந்த 1950 முதல் 2010 வரை, 60 ஆண்டுகள் சராசரியாக 7 சதவீதம் என இருந்தது. 2022 ஏப்ரல் முதல் ஜூன் வரை பணவீக்கம் 7.8 சதவீதமாக இருந்தது. நடப்பாண்டு (2023) அக்டோபர் வரை 4.8 சதவீதமாக உள்ளது. கடந்தாண்டு கச்சா எண்ணெய் விலை சராசரி 95 டாலராக இருந்தது. நடப்பாண்டு 83 டாலராக உள்ளது. ஒப்பிடுகையில் 12 முதல் 15 சதவீதம் குறைந்துள்ளது. பல்வேறு காரணங்களால் அந்நிய நேரடி முதலீடுகள் குறைந்துள்ளன. இருந்தபோதும் இந்தியா நிதி ஓட்டம் பாதிக்கப்படவில்லை. வரி சார்ந்த வருமானம் இந்தியாவில் அதிகரித்துள்ளது.

எதிர்கால வளர்ச்சிக்கு விரிவாக்கத்திற்கு சரியான தருணம் என தனியார் துறை எண்ணுகின்றன. இருப்பினும் போர், அதிக வட்டி உள்ளிட்டவை முதலீடு செய்ய அவர்கள் மத்தியில் தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. வீட்டு கடன் நிலையான வளர்ச்சியை தக்கவைத்துள்ளது. டிஜிட்டல் புரட்சியில் இந்தியா சிறப்பாக உள்ளது. மிகச்சிறந்த டிஜிட்டல் கட்டமைப்பு காரணமாக எதிர்காலத்தில் இந்தியா மேலும் சிறந்து விளங்கும்.

அதிக சர்க்கரை, கலோரிகள் நிறைந்த ஜங்க் ஃபுட் உணவுப் பழக்கம் உடல் நலனை பாதிப்பது மட்டுமின்றி எதிர்கால இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும். சத்தான பழங்கால உணவு முறைக்கு அனைவரும் மாறுவது அவசியம்” என்று அவர் பேசினார். நிகழ்வில் இந்திய தொழில் வர்த்தக சபை கோவை தலைவர் ஸ்ரீராமலு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Thanks

Check Also

1159653

கோவையில் 2.5 ஏக்கரில் 3 நூற்பாலைகள் அமைப்பது சாத்தியமல்ல… ஏன்? | Setting up 3 spinning mills in 2.5 acres in Coimbatore is not feasible

கோவை: ஜவளித் தொழில் வளர்ச்சிக்கு உதவும் வகையில் தமிழக அரசு அறிவித்துள்ள சிறிய ஜவுளிப் பூங்கா திட்டம் நூற்பாலைகளுக்கு பயன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *