Sunday , December 3 2023
1127298

இந்தியா, கனடா… யாரை அமெரிக்கா ஆதரிக்கும்? – யுஎஸ் ராணுவ முன்னாள் அதிகாரி கருத்து | If US Has To Pick India Or Canada, It Will Choose…: Ex Pentagon Official

வாஷிங்டன்: காலிஸ்தான் பிரிவினைவாதி கொலை விவகாரத்தில் அமெரிக்கா யாருக்கு ஆதரவு தெரிவிக்கும் என்பது பற்றி அந்நாட்டு ராணுவத் தலைமையகமான பென்டகனின் முன்னாள் அதிகாரி சொன்ன கருத்து கவனம் பெற்றுள்ளது. காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொலை வழக்கு காரணமாக இந்தியா – கனடா இடையே மோதல் வலுத்துள்ள நிலையில், அவருடைய கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது. ‘யானையுடன் எறும்பு மோதுவது போல் இந்தியாவுடன் கனடா மோதுகிறது’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மைக்கேல் ரூபின் என்ற அந்த அதிகாரி, “கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகள் இந்தியாவைக் காட்டிலும் கனடாவுக்குத் தான் பெரிய ஆபத்துக்கு வழிவகுத்துள்ளது. இந்த விவகாரத்தில் யாருக்கு ஆதரவு என்ற சூழலை அமெரிக்கா எதிர்கொண்டால், நிச்சயமாக இந்தியாவைத்தான் தேர்வு செய்யும். கனடாவைவிட இந்தியாவுடனான உறவையே அமெரிக்கா முக்கியமானதாகக் கருதுகிறது. இந்தியாவுடன் கனடா மோதுவது ஓர் எறும்பு யானையை எதிர்கொள்வதைப் போன்றதாகும்” என்றார்.

மேலும், அண்மையில் வெளியான கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீதான மக்கள் அதிருப்தி கருத்துக் கணிப்பு ஒன்றை சுட்டிக்காட்டிய அவர், “பிரதமர் பதவிக்கு ட்ரூடோ தகுதியானவர் அல்ல. அவர் சென்றபின்னர் கனடாவுனான உறவை அமெரிக்கா மீள்கட்டமைக்கும்” என்றார். | வாசிக்க > செல்வாக்கு இழக்கிறார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ: கருத்துக் கணிப்பில் தகவல்

மேலும், “இந்தியா மீது குற்றம்சாட்டி ஜஸ்டின் ட்ரூடோ மிகப் பெரிய தவறிழைத்துவிட்டார் என்றே நான் கருதுகிறேன். எந்தக் குற்றச்சாட்டை சுமத்தினாரோ அதை நிரூபிக்க திராணி இல்லாமல் சுமத்தியுள்ளார். இந்திய அரசுக்கு எதிரான அவருடைய குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அவரிடம் ஆதாரங்கள் இல்லை. ஒரு பயங்கரவாதிக்கு ஏன் ஆதரவு கொடுத்தது என்பதை விளக்க வேண்டிய கட்டாயத்தில் ட்ரூடோ அரசு இருக்கிறது.

இந்தச் சூழலில் கனடாவா, இந்தியாவா என்ற சூழலை அமெரிக்கா எதிர்கொள்ளாது என்று நம்புகிறேன். ஒருவேளை அப்படி நேர்ந்தால், நிச்சயமாக நாங்கள் இந்தியாவையே ஆதரிப்போம். காரணம், நிஜார் ஒரு பயங்கரவாதி. இந்தியாவுடனான நட்புறவு அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியம்” என்றும் ரூபின் கூறியுள்ளார்.

மோதல் பின்னணி: கனடாவைச் சேர்ந்த சீக்கியத் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் 18-ம் தேதி கனடாவில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும், கனடாவில் உள்ள இந்திய தூதரை வெளியேறஉத்தரவிட்டார். இதற்கு எதிர்வினையாக இந்திய அரசு, இந்தியாவில் உள்ள கனட அதிகாரியை வெளியேற உத்தரவிட்டது. இதையடுத்து கனடாவுக்கு இந்தியாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

என்ன சொல்கிறார் ஜஸ்டின் ட்ரூடோ? – கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒட்டாவா நகரில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், “நிஜார் கொலையில் இந்திய அரசு முகவர்களுக்கு உள்ள தொடர்பு குறித்த ஆதாரங்களை இந்திய அரசுடன் பல வாரங்களுக்கு முன்னதாகவே பகிர்ந்து கொண்டோம். திங்கள்கிழமை வெளிப்படையாக இந்திய அரசின் மீதான குற்றச்சாட்டை நான் முன்வைத்தேன். ஆனால், ஆதாரங்களை பல வாரங்களுக்கு முன்னரே இந்தியாவிடம் பகிர்ந்துவிட்டோம். இந்தியாவுடன் இப்பிரச்சினையில் ஆக்கபூர்வமாக செயல்படவே விரும்புகிறோம். அவர்களும் எங்களுடன் ஒத்துழைப்பார்கள் என நம்புகிறோம். அப்போதுதான் இந்த விவகாரத்தின் ஆழத்தை அறிய முடியும்” என்றார்.

அமெரிக்க நிலைப்பாடு என்ன? – இதனிடையே, காலிஸ்தான் பிரிவினைவாதி கொலையில் இந்தியாவுக்கு சிறப்பு விதிவிலக்கு ஏதும் கிடையாது என்று அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. கனடாவுடனான உறவில் பிளவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் கருத்தை அமெரிக்கா ஏற்கவில்லை என்றும், காலிஸ்தான் பிரிவினைவாதி கொலை தொடர்பான விசாரணை விரைவில் அடுத்தக்கட்டத்துக்கு முன்னெடுத்துச் செல்லப்படுவதை காண விரும்புவதாகவும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் பேசுகையில், “காலிஸ்தான் பிரிவினைவாதி பிரச்சினையில் சம்பந்தப்பட்ட இந்தியா, கனடா ஆகிய இரு நாடுகளுடனும் அமெரிக்கா தொடர்பில் இருக்கிறது. இதுபோன்ற செயல்பாடுகளில் சிறப்பு விலக்கு ஏதும் அளிக்கப்பட இயலாது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. கனடாவின் குற்றச்சாட்டுகளை உற்று கவனிக்கிறோம்.

காலிஸ்தான் பிரிவினைவாதி கொலையில் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். இந்தப் பிரச்சினையில் நேரடியாக பிரதமர் மோடியுடன் அதிபர் ஜோ பைடன் பேசுவாரா என்பது தெரியாது. ஆனால், இவ்விவகாரம் தொடர்பாக அமெரிக்க உயர்மட்ட அளவில் ஆலோசனைகள் நடைபெற்றுள்ளன” என்று அவர் கூறியுள்ளார்.

Thanks

Check Also

1162233

பாலஸ்தீன பிரச்சினைக்கு நீடித்த தீர்வு காண இஸ்ரேலுக்கு பிரதமர் மோடி அழைப்பு | PM meets Israel President, calls for durable resolution of Palestine issue

துபாய்: பாலஸ்தீன பிரச்சினைக்கு நீடித்த தீர்வு காண இஸ்ரேல் முன்வர வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஐசக் ஹெர்சாக்கிடம் பிரதமர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *