கோவை: துடித்துக்கொண்டிருக்கும் இதயத்தில் காயம்பட்ட இடத்தை உடனடியாக சரி செய்து சூடான் இளைஞரின் உயிரை கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
இது தொடர்பாக மருத்துவமனையின் டீன் நிர்மலா கூறியதாவது: சூடான் நாட்டைச் சேர்ந்த 24 வயதுடைய மாணவர் கோவை யில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். இந்நிலையில், கடந்த 2-ம் தேதி நெஞ்சு, வயிற்று பகுதியில் கத்திக்குத்து காயங்களுடன் அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அவருக்கு இதயத்தில் காயமும், அதனால் ஏற்பட்ட ரத்தக் கசிவு காரணமாக, இதயத்தை சுற்றியுள்ள சவ்வில், ரத்தம் தேங்கி இதயத்தை அழுத்திக் கொண்டிருப்பதும் தெரியவந்தது.
இதனால், இதயத்தின் செயல்பாடு வெகுவாக குறைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இளைஞருக்கு, முதலுதவி அளித்து, பிறகு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதய அறுவை சிகிச்சை துறைத்தலைவர் சீனிவாசன், உதவி பேராசிரியர் வி.அரவிந்த், மயக்கவியல் துறை தலைவர் கே.கல்யாண சுந்தரம், உதவி பேராசிரியர் ஏ.நக்கீரன், முது நிலை மருத்துவ மாணவர்கள் ஜி.சந்திர சேகரன், சௌமியா, நிவேதா, செவிலியர்கள் பொற்கொடி, சங்கீதா ஆகியோர் கொண்ட மருத்துவக் குழுவினர் அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.
இதயத்தைச் சுற்றி இருந்த ரத்தம் எடுக்கப்பட்டவுடன் இதயம் சீராக துடிக்கத் தொடங்கியது. மேலும், வலது பக்க இதயத்தில் காயம் ஏற்பட்ட இடத்தில் ரத்தக்கசிவு ஏற்பட்டு வந்தது. துடித்துக்கொண்டிருக்கும் இதயத்தில், காயம் பட்ட இடத்தை சரிசெய்வது என்பது சவாலான காரியம் ஆகும்.
இந்நிலையில், மயக்க வியல் நிபுணர்களின் உதவியுடன் இதயத்தை கட்டுப்படுத்தி இதயத்தில் இருந்த காயம் சரி செய்யப்பட்டது. உரிய நேரத்தில் இந்த சிகிச்சை அளிக்கப்பட்டதால் இளைஞரின் உயிர் காப்பாற்றப்பட்டது. சிகிச்சை முடிந்து அந்த இளைஞர் நலமுடன் வீடு திரும்பினார். இவ்வாறு அவர் கூறினார்.
.