மதுராந்தகம்: இடைக்கழிநாட்டை அடுத்த கெங்கதேவன் குப்பத்தில் சாலையை சீரமைக்கக் கோரி அப்பகுதிவாசிகள் சாலையில் தேங்கிய மழைநீரில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரை அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு கெங்கதேவன் குப்பம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இப்பகுதியில் உள்ள பிரதான சாலை மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்து காணப்படுகிறது. இச்சாலையை சீரமைக்க கோரி அப்பகுதி வாசிகள் பலமுறை மனுக்களை வழங்கியும் பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், மேற்கண்ட சாலையை சீரமைக்க கோரி சாலையில் தேங்கியுள்ள மழைநீரில் மக்கள் நாற்று நடும் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். மேலும், கோரிக்கையை வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டனர். தகவல் அறிந்த பேரூராட்சி அதிகாரிகள், சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.