சென்னை: இங்கிலாந்து மற்றும் தமிழக உயர்கல்வி நிறுவனங்களுக்கு இடையே மாணவர்கள், ஆசிரியர்களைப் பரிமாறிக் கொள்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
பிரிட்டிஷ் கவுன்சில் சார்பாக உயர்கல்வி குறித்த சிறப்புக் கருத்தரங்கம் சென்னையில் நடத்தப்பட உள்ளது. இதில் பிரிட்டன் உயர்கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள், தமிழகப் பல்கலை.களின் துணைவேந்தர்கள் பங்கேற்று கலந்துரையாட உள்ளனர். இதற்கான தொடக்க விழா சென்னையில் உள்ள அதன் மையத்தில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, உயர்கல்வித் துறை செயலர் ஏ.கார்த்திக், பள்ளிக்கல்வி செயலர் காகர்லா உஷா, பிரிட்டிஷ் கவுன்சிலின் தென்னிந்தியா இயக்குநர் ஜனக புஷ்பநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்தக் கருத்தரங்கில் இரு நாடுகளின் உயர்கல்வி நிறுவனங்களுக்கு இடையே மாணவர்கள், ஆசிரியர்களைப் பரிமாற்றம் செய்து கொள்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதற்கான ஒப்பந்தத்தில் உயர்கல்வித் துறை செயலர் கார்த்திக் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சிலின் தென்னிந்தியா இயக்குநர் ஜனகபுஷ்பநாதன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தம் மூலம் 2 நாடுகளுக்கும் இடையே கல்வி வளர்ச்சிக்கான பணிகளை முன்னெடுத்தல் உள்ளிட்ட செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் இந்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கல்வியறிவு மேம்படுத்தப்படும்: இதுகுறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் க.பொன்முடி கூறும்போது, “இரு நாடுகளுக்கு இடையே கல்வி சார்ந்த உறவுகளை மேம்படுத்த இந்த ஒப்பந்தம் உதவிகரமாக இருக்கும். அண்ணாபல்கலைக்கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகம் பிரிட்டன் உயர்கல்வி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளன.
அதேபோல், மற்ற பல்கலைக்கழகங்களும் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.இதன்மூலம் மாணவர்களின் கல்வியறிவு மேம்படுத்தப்படும். மேலும், சர்வதேச கல்வி வளர்ச்சியைப் பெற்று வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் இந்த செயல்பாடு வழிவகுக்கும்’’ என்றார்.