ஆவடி: ஆவடியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு படை உடை தொழிற்சாலை சார்பில், நிவாரண தொகை வழங்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி -கிரிநகரில் உள்ள மத்திய பாதுகாப்புத் துறை நிறுவனமான, படை உடை தொழிற்சாலை ஊழியர்கள் குடியிருப்பு வளாகத்தில் கழிவுநீர் தொட்டியை தூய்மை செய்யும் பணியில் கடந்த 7-ம் தேதி, ஈடுபட்டபோது ஒப்பந்த தூய்மை பணியாளர்களான பட்டாபிராம் -பீமராவ் நகரை சேர்ந்த மோசஸ் (39), ஆவடி பஜார் நகர் பகுதியைச் சேர்ந்த தேவன் (50) ஆகியோர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.
இதைத் தொடர்ந்து, ஆவடி பகுதியை சேர்ந்த, ஒப்பந்த நிறுவனத்தின் உரிமையாளரான சம்பத்(63) மற்றும் மேற்பார்வையாளர் மனோ(51) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, படை உடைத் தொழிற்சாலை சார்பில் உரிய நிவாரணத் தொகையை துரிதமாக வழங்கவேண்டும் என, படை உடை தொழிற்சாலை பொதுமேலாளர் சீனிவாச ரெட்டியிடம் அறிவுறுத்தினார். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகளில் படை உடை தொழிற்சாலை நிர்வாகம் ஈடுபட்டது.
தலா ரூ.15 லட்சம்ள்: அதன் விளைவாக, நேற்று ஆவடி படை உடைத் தொழிற்சாலை கூட்டரங்கில், விஷவாயு தாக்கி உயிரிழந்த ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களான மோசஸ், தேவன் ஆகிய இருவரின் குடும்பங்களுக்கு படை உடைத் தொழிற்சாலை சார்பில், நிவாரணத் தொகையாக தலா ரூ.15 லட்சம் என, ரூ.30 லட்சத்துக்கான காசோலைகளை தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் வழங்கினார்.
இதில், மாநகராட்சி ஆணையர் தர்ப்பகராஜ், காவல் துணை ஆணையர் பாஸ்கரன், படை உடை தொழிற்சாலை பொது மேலாளர் சீனிவாசரெட்டி, மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலர் செல்வராணி, படை உடை தொழிற்சாலை தொழிலாளர் நல அலுவலர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.