சென்னை: ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தில் கலைஞர் நூற்றாண்டு நினைவு பன்னாட்டு அரங்கம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நினைவு பன்னாட்டு அரங்கம் கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு கிராமத்தில் கட்டப்பட இருப்பதாகவும், கலைஞர் பன்னாட்டு அரங்கம் கட்டப்படவுள்ள 60 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் பெரும் பகுதி ஆயிரம் காணி ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம் என்றும் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. இந்த செய்திகளின் உண்மைத் தன்மை குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.