சென்னை: சென்னையில் ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் நடந்த ‘ஆல்டியஸ்-2023’ என்ற விளையாட்டுப் போட்டிகளில் ஒட்டுமொத்த ரன்னர் -அப் பட்டத்தை எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி தட்டிச் சென்றது.
காட்டாங்கொளத்தூரில் எஸ்ஆர்எம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். கடந்த 1-ம் தேதி தொடங்கி 4-ம் தேதி வரை நடந்த போட்டிகளில் 25 மருத்துவக் கல்லூரிகள் பங்கேற்றன. இதில் எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி ஒட்டுமொத்த ரன்னர்-அப் பட்டத்தை வென்றது.
இந்த விளையாட்டு போட்டிகளில் ஆடவர் கால்பந்து மற்றும் மகளிர் டென்னிஸ் போட்டிகளில் வெற்றியும், மகளிருக்கான கூடைப்பந்து மற்றும் கேரம் போட்டிகளில் இரண்டாம் இடத்தையும் பெற்றது.
இதேபோல், தடகளப் போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வி.நவீன் வெள்ளி பதக்கமும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கமும் வென்றார். இதே ஓட்டத்தில் ஹரிஹரன் வெண்கலம் வென்றார்.
மேலும் 1,500 மீட்டருக்கான ஓட்டப் பந்தயத்தில் நிதீஷ் வெள்ளியும், ஷான் வெண்கலமும் வென்றனர். 4X 100 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் வி.நவீன், ஆலன் ரோஸாரியஸ், ஷசாங்க் மற்றும் கிருஷ்ணன் ஆகியோரைக் கொண்ட அணி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.