ஆற்காடு: ஆற்காடு அடுத்த முப்பது வெட்டி கிராமத்தில் 9 மாத பெண் குழந்தைக்கு டெங்கு பாதிப்பு உறுதி யானதை தொடர்ந்து அப்பகுதி யில் காய்ச்சல் தடுப்பு நடவடிக் கைகளில் சுகாதாரத் துறையினர் நேற்று ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி கிராமத்தில் 9 மாதங்களே ஆன பெண் குழந்தைக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு இருந்து வந்தது. இதையடுத்து, குழந்தையை ஆற்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த போது டெங்கு அறிகுறிகள் இருப்பதாக கருதிய மருத்துவமனை நிர்வாகம் குழந்தையை சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும்படி பரிந்துரை செய்தது.
அதன்படி குழந்தைக்கு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அங்கு மேற்கொண்ட பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப் பது உறுதியானது. மேலும், அதே மருத்துவமனையில் குழந்தைக்கு சிறுநீரக பிரச்சினை தொடர்பாகவும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழந்தைக்கு டெங்கு பாதிப்பு உறுதியானதை தொடர்ந்து முப்பதுவெட்டி கிராமத்தில் ராணிப்பேட்டை மாவட்ட பொது சுகாதார துணை இயக்குநர் மணிமாறன் உத்தரவின் பேரில், தொழில் நுட்ப நேர்முகஉதவியாளர் (துணை இயக்குநர்) பிரேம் ஆனந்த் தலைமையிலான கொசு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் நேற்று வீடுகளில் ஆய்வு மேற்கொண்டு, கொசுப்புழு ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும், தண்ணீர் தொட்டி களில் அபேட் மருந்து கரைசல் தெளிக்கப்பட்டது. அப்பகுதியில் வீடுகளுக்கு குளோரின் கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. பொதுமக்களுக்கு காய்ச்சல் மற்றும் பிற பாதிப்பு கள் ஏதேனும் உள்ளதா என பரி சோதனைகளும் மேற் கொள் ளப்பட்டன.