பொன்னேரி: பொன்னேரி அருகே ஆலாடு கிராமத்தில் ஆரணி ஆற்றில் ஐம்பொன்னால் ஆன அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே ஆலாடு கிராமத்தில், ஆரணி ஆற்றில் அணைக்கட்டு பகுதியில் பொதுமக்கள் சிலர் நேற்று காலை குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, ஆற்றினுள் சிலை ஒன்று கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து, பொதுமக்கள் அதனை எடுத்துப் பார்த்த போது, அச்சிலை கையில் கிளி மற்றும் கிரீடத்தில் பிறையுடன் சுமார் ஒரு அடி உயரம் மற்றும் முக்கால் அடி அகலம் கொண்ட ஐம்பொன்னால் ஆன அம்மன் சிலை என்பது தெரியவந்தது. இதையடுத்து அச்சிலையை கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் உள்ள அம்மன் கோயிலில் வைத்து வழிபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வருவாய் துறையினர், ஐம்பொன் சிலையை மீட்டு பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அதனை ஆய்வு செய்த வட்டாட்சியர் செல்வகுமார் பதிவறையில் பாதுகாப்பாக வைத்தார்.
ஆரணி ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட சிலை கருவூலத்தில் வைக்கப்படும் எனவும் சிலை ஐம்பொன்னால் ஆனதா அல்லது வேறு உலோகத்தால் ஆனதா, எந்த நூற்றாண்டை சேர்ந்தது என்பது உள்ளிட்டவை குறித்து தொல்லியல் துறை மூலம் ஆய்வுக்குட்படுத்தப்படும் எனவும் தெரிவித்தனர்.