சென்னை: பணி மற்றும் குடும்ப வாழ்வு என இரண்டிலும் சிறந்து விளங்கும் வகையில் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்களுக்கு மன அழுத்த மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது. இதை சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தொடங்கி வைத்தார்.
சென்னை காவல் துறையில் பணியாற்றும் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் பணியின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக மன அழுத்த மேலாண்மை திட்டம் கொண்டு வரப்பட்டது. இதில்ஒரு நாள் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
உளவியல் ஆலோசனைகள்: இப்பயிற்சி வகுப்பை சென்னைகாவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று காலை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் தொடங்கி வைத்தார். இப்பயிற்சி வகுப்பில் போலீஸார் பணியிலும், குடும்ப வாழ்விலும்சிறந்து விளங்கவும், அவர்களின்மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்திஉடல் நலனைப்பேணவும் தகுந்த உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
விரிவுபடுத்த திட்டம்: மேலும், அவர்களுக்குக் கீழே பணிபுரியும் காவலர்கள் மற்றும் காவலர்களின் நலன், குறைகளைக்கேட்டறிந்து தீர்த்தல், பணியின்போது சக காவலர்கள் மற்றும் காவலர்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பது குறித்தும் தகுந்தஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இந்த மன அழுத்த மேலாண்மை பயிற்சியானது மற்றகாவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் எனக் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்தார். ஊக்குவிப்பு பேச்சாளர் பி.ஆர்.சுபாஸ் சந்திரன் நல்வாழ்வு பயிற்சி வகுப்பை நடத்தி, மனநலம் மற்றும் சமூகப் பிரச்சினைகள் மற்றும் அவற்றை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து பேசினார்.
நிகழ்ச்சியில் இணை ஆணையர் கயல்விழி (தலைமையிடம்), துணை ஆணையர்கள் சீனிவாசன் (நிர்வாகம்), எஸ்.எஸ் மகேஷ்வரன் (நவீன காவல் கட்டுப்பாட்டு அறை)ஆகியோர் கலந்து கொண்டனர். சென்னை பெருநகர காவல் துறையில் உள்ள 217 காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் இந்தப் பயிற்சி வகுப்பின் மூலம் பயனடைந்தனர்.