அமைச்சர் கீதாஜீவன் குறித்து அவதூறாக பேசிய, சசிகலா புஷ்பா மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு திமுக மேடை ஒன்றில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், முதல்வர் மற்றும் அமைச்சர்களை பற்றி பேசுவதை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நிறுத்திக் கொள்ள வேண்டும் இல்லையென்றால் அவர் இருக்கும் மேடை ஏறுவோம் என்று திமுக பொதுகூட்டத்தில் பேசி இருந்தார்.
இதனைத்தொடர்ந்து, புதன்கிழமை இரவு தூத்துக்குடியில் பாஜக சார்பில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா பேசும் போது “எங்கள் தலைவர் இருக்கும் மேடை ஏறுவீர்களா? முடிந்தால் ஏறிப் பாருங்கள்! நீங்கள் வீட்டிலிருந்து வெளியே வரும்போது கால் இருக்காது. அண்ணாமலை பற்றி பேசினால் நாக்கு இருக்காது” என்று பேசினார்.
இந்த நிலையில் நேற்று சசிகலா புஷ்பா வீட்டில் இல்லாத நேரத்தில் மர்ம நபர்கள் அவரது கார் கண்ணாடி மற்றும் வீட்டின் கண்ணாடிகளை அடித்து உடைத்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து, அமைச்சர் கீதாஜீவன் குறித்து அவதூறாக பேசிய, சசிகலா புஷ்பா மீது அவதூறு பரப்புதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சசிகலா புஷ்பாவின் கார் கண்ணாடியை உடைத்ததாக திமுக கவுன்சிலர்கள் ராமகிருஷ்ணன், இசக்கிராஜா உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.