புதுடெல்லி: இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டர்நேஷனல் எஜுகேஷன் (ஐஐஇ), அமெரிக்காவில் சர்வதேச பட்டதாரி மாணவர்கள் குறித்த ஓபன் டோர்ஸ் என்ற ஆய்வறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அமெரிக்க கல்வி நிறுவனங்களில் 2022-23-ம் கல்வியாண்டில் மொத்தம் 2,68,923 இந்திய மாணவர்கள் பல்வேறு பட்டப்படிப்புகளில் சேர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். 2009-10-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போதுதான் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை சீனாவை விஞ்சியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு கல்வி பயில வரும் மாணவர்களின் எண்ணிக்கை 2022-23-ம் கல்வியாண்டில் 35 சதவீதம் அதிகரித்து 2,68,923-ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் படிக்கும் 10 லட்சம் வெளிநாட்டு மாணவர்களில் 25 சதவீதத்துக்கும் அதிகமானோர் இந்திய மாணவர்களாக உள்ளனர்.
2022-23-ல் பட்டதாரி மாணவர்களின் எண்ணிக்கை 63 சதவீதம் அதிகரித்து 1,65,936-ஆக உள்ளது.இது, 2021-22 ஆண்டுடன் ஒப்பிடும்போது 64,000 மாணவர்கள் அதிகம். அதேபோன்று, இளங்கலை மாணவர்களின் எண்ணிக்கையும் 16 சதவீதம் உயர்ந்துள்ளது.
ஓபிடி எனப்படும் விருப்பமான நடைமுறைப் பயிற்சியை மேற்கொண்ட தனிநபர்களின் எண்ணிக்கையில் இந்தியா (69,062 பேர்) முன்னணியில் உள்ளது. ஓபிடி என்பது ஒரு வகையான தற்காலிக பணிக்கான அனுமதியாகும்.
2023 ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் இந்திய மாணவர்களுக்காக எஃப், எம் மற்றும் ஜே வகையைச் சேர்ந்த 95,269 விசாக்களை வழங்கி சாதனை படைத்துள்ளது. இது, முந்தைய 2022-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 18 சதவீதம் அதிகம்.
ஆலோசனை மையங்கள்: இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் சரியான மற்றும் தகுதியான படிப்பு வாய்ப்புகளை கண்டறிவதற்காக டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை, ஹைதரா பாத் ஆகிய நகரங்களில் ஆலோ சனை மையங்கள் அமைக்கப்பட்டு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், 4,500-க்கும்மேற்பட்ட அங்கீகாரம் பெற்ற அமெரிக்க உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள சிறந்த படிப்பு திட்டங்களை விரைவாகவும், துல்லியமாகவும் இந்திய மாணவர்கள் கண்டறிவது எளிதாகிஉள்ளது. இவ்வாறு ஐஐஇ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.