சென்னை: சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கு விசாரணையிலிருந்து விலகிக் கொள்வதாக உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் அறிவித்துள்ளார்.
தற்போது தமிழக மீன்வளத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் அனிதா ராதாகிருஷ்ணன், கடந்த 2001- 2006 அதிமுக ஆட்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ. 2 கோடிக்கு மேல் சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக கடந்த 2006-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் அடிப்படையில் அவருக்கு எதிராக சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துகளை கடந்தாண்டு அமலாக்கத் துறையினர் முடக்கினர்.
தனது சொத்துகளை முடக்கியதை எதிர்த்தும், தனக்கு எதிராக அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்யக்கோரியும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறையின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு விசாரணையில் இருந்து விலகிக்கொள்வதாக நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் அறிவித்தார்.
.
அதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கை தலைமை நீதிபதியின் ஒப்புதல் பெற்று, வேறு அமர்வு முன்பாக பட்டியலிட பதிவுத்துறைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.