Tuesday , November 28 2023
1127780

அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்பதில் மாற்றுக் கருத்தில்லை: ஜெயக்குமார் | No BJP in AIADMK alliance: Jayakumar

சென்னை: “நாளை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், இப்போது எந்த கருத்தையும் கூறுவது சரியாக இருக்காது. கூட்டணியைப் பொறுத்தவரையில், அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று கடந்த 18ம் தேதி எடுத்த முடிவில் மாற்றுக் கருத்து இல்லை” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்ற கருத்தில் எந்தவிதமான மாறுபட்ட கருத்தும் இல்லை. நாளை எம்ஜிஆர் மாளிகையில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. கூட்டம் நடைபெறவுள்ள சூழலில் என்னால், வேறு எந்த கருத்தும் தெரவிக்க இயலாது. ஒருநாள் காத்திருந்தால், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை ஊடகங்களில் அறிவிக்கிறேன்.

தமிழகத்தில் இரண்டரை லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த குறுவை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் ஏக்கருக்கு ரூ.35,000 வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் அரசு யானை பசிக்கு சோளப்பொறி போல ஒரு நிவாரணத் தொகையை அறிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 90 சதவீத அளவுக்கு கர்நாடக அணைகளில் தண்ணீர் இருந்த நிலையில், தமிழகத்துக்கு தரவேண்டிய 60 டிஎம்சி தண்ணீரில், 10 டிஎம்சி தண்ணீர் மட்டுமே வழங்கியுள்ளனர்.

தமிழக அரசு உரிய நேரத்தில் கர்நாடகத்திடம் இருந்து தண்ணீரை கேட்டுப் பெறாத காரணத்தால், இரண்டரை லட்சம் ஏக்கர் அளவில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. அதே போல், கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து டெங்குவால் 4000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன.

எனவே, நாளை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், இப்போது எந்தக் கருத்தையும் கூறுவது சரியாக இருக்காது. கூட்டணியைப் பொறுத்தவரையில், அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று கடந்த 18-ம் தேதி எடுத்த முடிவில் மாற்றம் இல்லை” என்று அவர் கூறினார்.

Thanks

Check Also

1160114

சட்டக்கல்லூரி மாணவர்கள் ஜனநாயகத்தை காக்க போராட வேண்டும்: ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு | Students should fight bravely to save democracy in the future

திருவள்ளூர்: சட்டக்கல்லூரி மாணவ – மாணவிகள் வருங்காலத்தில் ஜனநாயகத்தை காப்பாற்ற போராட முன்வர வேண்டும் என, பட்டரைபெரும்புதூர் டாக்டர் அம்பேத்கர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *