சென்னை: சென்னையில் ஒரு மணி நேரத்தில் 10 செ.மீ. மழை பெய்தாலும், அதை எதிர்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் தயாராக இருப்பதாக ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை மாநகரில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்துவருகிறது. இதைத் தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து, ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு சென்று, நிவாரண ஒருங்கிணைப்பு பணிகளை பார்வையிட்டார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கடந்த ஆண்டில் மழை நீர் தேங்கிய 85 இடங்களில் இந்த முறை நீர்தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் நியமித்தவல்லுநர்கள் குழு பரிந்துரைகள்அடிப்படையில் அப்பகுதிகளில்சுமார் 876 கி.மீ. நீளத்துக்குவடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன. மழை நீர் தேங்கும் இடங்களில் மோட்டார் பம்ப்கள் மூலம் தொடர்ந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தேவைக்கேற்ப பயன்படுத்த, டிராக்டர் மூலம் இயங்கும் மழைநீர் இறைக்கும் 180 இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.ஒரு மணி நேரத்தில் 10 செ.மீ. மழை பெய்தாலும், அதை எதிர்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் தயாராக உள்ளது.
இதுவரை பெரிய அளவிலான புகார்கள் பெறப்படவில்லை. வீடுகள் முன்பு நீர் தேங்குவது (276 புகார்கள்), தெருவிளக்குகள் (97), மரம், கிளைகள் விழுதல் (16),கழிவுநீர் வெளியேறுதல் (5), மின்சாரம் இல்லாதது (4) உட்பட 401புகார்கள் பெறப்பட்டு, 107 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மற்ற புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரிவாக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர், கழிவுநீர் திட்டப் பணிகள் பெரிய அளவில் நடந்து வருகின்றன. இதன் காரணமாக சில இடங்களில் சாலை மோசமாக இருந்தாலும், தற்காலிகமாக சரிசெய்யப்பட்டு வருகிறது. மழை காலம் முடிந்ததும், சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படும். மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தினமும்45 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார். மாநகராட்சி கூடுதல் ஆணையர் ஆர்.லலிதா, துணை ஆணையர் சரண்யா அறி ஆகியோர் உடன் இருந்தனர்.