Sunday , December 3 2023
1126328

அண்ணாவை தேவர் மன்னிப்பு கேட்க சொல்லவில்லை; மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் நடந்தது என்ன? – பார்வர்டு பிளாக் முன்னாள் தலைவர் வி.எஸ்.நவமணி தகவல் | thevar not asked Anna to apologize in Madurai ex Forward Bloc VS Navamani

மதுரை: மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் நடந்த நிகழ்ச்சியில் அண்ணா பேசிய பேச்சுக்கு, முத்துராமலிங்கத் தேவர் மன்னிப்பு கேட்கசொன்னார் என்று சமீபத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியிருந்தார். இது சர்ச்சையாகி அதிமுக – பாஜகவினரிடையே கூட்டணி முறிவு ஏற்படும் நிலைக்குச் சென்றது.

இந்நிலையில், நடந்த சம்பவம் குறித்து அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் வி.எஸ்.நவமணி (70) கூறியதாவது: மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தின் பொன்விழா 1956-ல் நடந்தது. அப்போது சங்கத்தின் தலைவராக நீதிக் கட்சியைச் சேர்ந்த பி.டி.ராஜன் இருந்தார். பொன்விழா தொடக்க நிகழ்ச்சியில் மூதறிஞர் ராஜாஜி பேசினார்.

அந்தக்கால கட்டத்தில் திமுகவினர் திராவிட நாடு எனும் முழக்கத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். அதுகுறித்து ராஜாஜி பேசும்போது, தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என திருவாசகத்தில் சிவபெருமானே தென்னாட்டவர்தான் எனக் கூறப்பட்டுள்ளது. தமிழ்ச் சங்கத்தின் முதல் தலைவராக சிவபெருமான் இருந்ததாகவே வரலாறு என பேசினார்.

அழைப்பிதழில் அண்ணா இல்லை: 4-ம் நாள் நிகழ்ச்சியில் தமிழ்ச் சங்கத் தலைவர் பி.டி.ராஜன் பேசுவதாக இருந்தது. அப்போது மதுரையில் திமுக பொதுக் கூட்டத்தில் பங்கேற்க அதன் தலைவர் அண்ணா வந்திருந்தார். பொன்விழா அழைப்பிதழில் அண்ணாவின் பெயர் இடம்பெறவில்லை. ஆனால் அண்ணாவை பேச பி.டி.ராஜன் அழைத்தார்.

அதன்பேரில் மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் வந்து அண்ணா பேசினார். அப்போது சேலத்தைச் சேர்ந்த தமிழாசிரியரின் மகளான சிறுமி மணிமேகலை போட்டி ஒன்றில் முதல் பரிசு பெற்றிருந்தார்.

பின்னர் அண்ணா, “மேடையில் குழந்தை அற்புதமாகப் பேசியது. இவருக்கு புத்தகத்தை பரிசாக கொடுத்து ஏமாற்றி அனுப்பிவிட்டனர். இதுவே அந்தக் காலமாக இருந்தால் உமையம்மையிடம் ஞானப்பால் குடித்ததால் வந்த ஞானத்தால் பேசியது என்று சொல்லியிருப்பர்” என்று பேசினார்.

இந்தத் தகவல் 6-ம் நாள் விழாவில் பேசவேண்டிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு எட்டியது. ஆனால், 5-ம் நாள் விழாவுக்கே வந்து பி.டி.ராஜனிடம் தான் பேசவேண்டும் என்று தேவர் கூறினார். நாளைக்குத் தானே உங்கள் நிகழ்ச்சி, நாளைக்கு வந்து பேசுங்களேன் என்று பி.டி.ராஜன் சொன்னார். அதை ஏற்க மறுத்த தேவர், அண்ணாதுரை எப்படி பேசினார், நான் இன்று பேச வேண்டும் என்று சொல்லிட்டு பி.டி.ராஜனை கையால் தள்ளியவாறு மேடையேறினார்.

இதுவே முதலும், கடைசியும்: அன்றைய நிகழ்ச்சிக்கு மதுரை கிழக்கு எம்எல்ஏவாக இருந்த பி.கே.ஆர்.லட்சுமிகாந்தம்மாள் தலைமை வகித்தார். மேடையேறிய தேவர், ‘மரபுகளை மீறி மேடைகளைக் கைப்பற்றுவதும், ஒரு மாது தலைமை ஏற்றிருக்கும்போது பேசுவதும் அடியேனுக்கு இதுதான் முதலும் கடைசியும்’ என்று பேசத் தொடங்கினார்.

ராஜாஜிக்கும் எனக்கும் ஆயிரம் கருத்து வேறுபாடு இருக்கலாம். அவரை, பிறப்பிலேயே ஐயப்பாடு இருப்பதாகக் கூறி, அவரது பிறப்பை ஊனப்படுத்தி, ஈனப்படுத்தி பேசியவர்களையெல்லாம் இந்த மேடையில் ஏற்றிப் பேசவிட்டது யார்? இது அம்மையப்பனின் ஆலயம் (மீனாட்சி அம்மனின் ஆலயம்). தான் படித்த படிப்பை மறந்து, கட்சியின் தலைவர் என்ற தலைமைப் பண்பை மறந்து, தான் கொண்டிருந்த நாத்திகப் பண்பை மட்டும் மறக்காமல் பேசிய இவரை பேசவிட்டது யார்?

அனைத்தும் ரத்தானது: இனிமேல் இந்த விழா கோயிலுக்குள் நடக்கக் கூடாது. மீறி நடந்தால் மீனாட்சி அம்மன் கோயிலில், மனித ரத்தத்தாலும் அபிஷேகம் நடக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் அதையும் நடத்தி வைக்க அடியேன் தயங்கமாட்டேன் என்று பேசிவிட்டுச் சென்றார். அதன் பின்னர் நடக்கவிருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதில் ஆதாரமில்லாமல் இல்லை. ஆனால், அண்ணா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தேவர் சொல்லவில்லை. அப்படிப்பட்ட சம்பவம் நடக்கவில்லை. மற்றபடி எல்லாம் சரிதான். இவ்வாறு அவர் கூறினார்.

Thanks

Check Also

1162678

“பிரதமரிடம் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையே பாஜக தேர்தல் வெற்றிகள்” – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி | Rangaswamy Greetings to BJP leaders

புதுச்சேரி: பிரதமர் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையே பாஜகவின் வெற்றிகள் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *